டெல்லி : இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸ் விவகாரம் வெளியான நிலையில், அது நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. இந்த மென்பொருள் வாயிலாக தேர்தல் தலைமை அலுவலர் முதல் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் வரை உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள இந்த மென்பொருள் மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போதைய ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஸ்ணவ், பிரகலாத் பட்டேல், முன்னாள் தேர்தல் அலுவலர் அசோக் லவாசா எனப் பலரும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தி வயர் ஆங்கில இணையதளத்தின் தகவல்கள் கூறுகின்றன.
அசோக் லவாசா 2019 தேர்தல் அலுவலராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் முதல்முறையாக அசோக் லவாசாவும் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தி வயர் ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி, “நான் உள்பட இந்திய குடிமகன்கள் வேவு பார்க்கப்பட்டது சட்டவிரோதம் அல்லவா? என கேள்வியெழுப்பியிருந்தார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு அலுவலர்கள் தொடர்ந்து மறுக்கின்றனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து மக்களவையில் விளக்கம் அளித்த தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், “ஆன்லைனில், கடந்த இரவு கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக வெளிவந்துள்ளது. இது தற்செயலாக இருக்க முடியாது” என்றார்.
கோவிட் இரண்டாம் அலை, எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் என நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாட்டு மக்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
இதற்கிடையில் எதிர்பார்த்ததை காட்டிலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒரு நிகழ்வு கூட நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களையும் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்திவைக்க முடியவில்லை.
சர்ச்சைக்கு காரணம் என்ன?
பிரான்ஸ் நாட்டின் இலாப நோக்கற்ற விசாரணை செய்தி நிறுவனமான ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் நடத்திய விசாரணையின்படி, இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனமான பெகாசஸ் உலகெங்கிலும் சுமார் 50 ஆயிரம் தொலைபேசி எண்களை கண்காணிக்க அரசுகளுக்கு உதவியுள்ளது.
இந்த 50 ஆயிரம் பேரில் 300 பேர் இந்தியர்கள் என தி வயர் கூறுகிறது. அவர்களில் ராகுல் காந்தி, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உள்ளனர்.
தி வயரின் அறிக்கையின்படி பெகாசஸ் மென்பொருள் நிறுவனம் அரசாங்கத்துடன் மட்டுமே ஒப்பந்தம் வாயிலாக செயல்பட்டுவருகிறது. ஆகவே பத்திரிகையாளர், எதிர்க்கட்சி தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதில் அரசாங்கத்திற்கு பங்கு உள்ளது.
செய்தியாளர்கள்
இந்தியாவில் வேவு பார்க்கப்பட்டவர்களில் 13 விழுக்காட்டினர் செய்தியாளர்கள் ஆவார்கள். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு முகமை, தேர்தல் ஆணையம் பிரிவு செய்திகளை கவனித்து வந்தவர்கள்.
இவர்களில் இந்தியா டுடே (சந்தீப் உன்னிதான்), தி இந்து (விஜய்தா சிங்), இந்துஸ்தான் டைம்ஸ் (ராகுல் சிங்), இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் பாதுகாப்பு பிரிவை கவனித்த செய்தியாளர் சுஷாந்த் சிங், இந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் சிஷிர் குப்தா என பட்டியல் நீள்கிறது.
பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தியை தவிர்த்து தற்போதைய ஒன்றிய அமைச்சர்களான அஸ்வினி வைஸ்ணவ், பிரகலாத் பட்டேல் ஆகியோரும் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரபல கட்டுரையாளர்கள் தேவிரூப மித்ரா, சுவாதி சதுர்வேதி, பிரேம் சங்கர் ஜா மற்றும் ரோஹினி சிங் ஆகியோரும் உளவு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் வணிக நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி தொடர் கட்டுரைகள் எழுதியவர்கள்.
தேர்தல் அலுவலர்கள்
இதுமட்டுமின்றி முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா முக்கியமான இலக்காக திகழ்ந்துள்ளார் என்று தி வயர் கட்டுரை கூறுகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி குறிவைத்துள்ளது. ஆக மழைக்கால கூட்டத்தொடர் பின்னடைவை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க : இத்தனை ஆபத்தானதா இஸ்ரேலின் பெகாசஸ்!