“மனிதர்களே கழிவுகளை கைகளால் அகற்றும் செயலானது தகுதிக்குறைவான வேலையாக இருக்கிறது. ஒரு நபரின் மனிதநேயத்தை அகற்றுவதாகவும் இருக்கிறது. இந்த வேலையில் புனிதமானது என்று எதுவும் இல்லை” என்று எச்சரித்தார் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். மனிதனே கழிவுகளை அகற்றும் முறையை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்ற அவர், விளக்குமாறில் இருந்து வெளியே வாருங்கள் என்றார். இந்த மோசமான தொழிலை மகிமைப்படுத்தும் கருத்தை அவர் மறுத்தார். பல ஆண்டுகள் கடந்து விட்டன.
ஆனால், இன்னும் நாம் இந்தியாவில் கழிவுகளை கைகளால் அள்ளும் மனிதர்களை வேலைக்கு அமர்த்துகின்றோம். கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை நியமிப்பதற்கு எதிரான இப்போதைய சட்டங்கள், அதனை ஒழிப்பதற்கு ஏற்றவை என்பது நிரூபணம் ஆகவில்லை. 2013-ம் ஆண்டு கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பணிக்கு அமர்த்துவதை தடை செய்யவும் அவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு வரைவு செய்தது. ஆனால், இன்னும் தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.
இந்த சூழலில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்யவும் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுக்குமான(திருத்த) சட்டம் 2020 என்ற மசோதாவை மழைகால கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இப்போதைக்கு செப்டிக் டேங்க்குகள், கழிவு குழிகள் சுத்தம் செய்வது ஆகிய அபாயகரமான பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் எந்த ஒரு நபர் அல்லது முகமைக்கும் தண்டனை அளிக்கும் வகையிலான 5 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். எனவே புதிய மசோதா மேலும் கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கழிவறை முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேன்ஹோல்கள், சாக்கடைகள், செப்டிக் டேங்க் ஆகியவற்றை சுத்தம் செய்யும் அவமானகரமான பணியை ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தி வருகின்றனர். 2019-ம் ஆண்டு மட்டும் 119 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 2016-ம் ஆண்டுக்கும் 2019-ம் ஆண்டுக்கும் இடையே செப்டிக் டேங்க் மறும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 282 சுகாதாரப் பணியாளர்கள் நாடு முழுவதும் உயிரிழந்திருக்கின்றனர்.
சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பு, இந்த எண்ணிக்கையானது போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்கிறது. சுகாதாரப்பணியாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட சுதந்திரமான, சாஃபாய் கர்மாசாரிஸ் அமைப்புக்கான தேசிய கமிஷன், 2017-ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே செப்டிக் டேங்க்-கள், மேன்ஹோல்களை சுத்தம் செய்யும் போது 127 பேர் உயிரிழந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த அமைப்பின் தோராய மதிப்பீட்டின் படி தேசிய தலைநகர் பகுதியில் மட்டும் இதே காலகட்டத்தில் 429 சுகாதாரப்பணியாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.
1993-ம் ஆண்டில் மனிதர்களை கழிவுகளை அள்ள ஆட்கள் நியமிப்பது மற்றும் உலர் கழிவறைகள் கட்டுதல் (தடை) சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்துவதை பெரும்பாலான மாநில அரசுகள் அலட்சியம் செய்து விட்டன. சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மகசேசே விருது பெற்றவருமான பெசாவாடா வில்சன், “சுகாதாரப்பணியாளர்களின் மறுவாழ்வு குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை 2013-ம் ஆண்டு சட்டம் கொடுக்கவில்லை” என்று கூறுகிறார்.
இந்த சட்டம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது மனிதர்களே கழிவுகளை அள்ளுவதை முற்றிலும் தடுத்து விடுவது என்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் எனவும் அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்துக்கு 4825 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டப்பட்டது. சட்டத்தை அமல்படுத்திய 9 மாதங்களுக்குள் இந்த தொகை செலவிடப்படும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணம் ஒதுக்கப்படவில்லை. சட்டத்தின் தோல்விக்கு நிதி என்பது மிகப்பெரிய காரணம்.
நிதி ஆயோக்கின் சர்வேயின்படி நாடு முழுவதும் 18 மாநிலங்களில் 170 மாவட்டங்களில் சுகாதாரப் பணியாளர்களாக 54,130 பேர் பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. மாநிலங்களவை கூட்டத்தொடரில் இந்த எண்ணிக்கை குறித்த தகவலை மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். கள அளவில் செயல்படும் தன்னார்வலர்கள் சுகாதாரப்பணியாளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்க க்கூடும் என்கின்றனர்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நமது நாட்டில் 21 லட்சம் உலர் கழிவறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை எல்லாம் மனிதர்களால் அகற்றப்பட வேண்டியவை. மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தகவலின்படி 1992-ம் ஆண்டில் 5.88 லட்சமாக இருந்த சுகாதாரப்பணியாளர்களின் எண்ணிக்கை 2002-03-ம் ஆண்டு 6.7 லட்சமாக அதிகரித்தது தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் இது தோராயமாக 8 லட்சத்தை அடைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இருக்கும் கழிவு நீர் அமைப்புகளை அதி நவீனமாக்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இயந்திரமுறையிலான சுத்தம் செய்யும் செயல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு உள்ளூர் அமைப்புகள் மிகவும் நன்றாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். மக்களுக்கு அதுகுறித்த கல்வியறிவை அளிக்க வேண்டும். இந்த நேரத்தில் சமூக அபாயமான இதற்கு முடிவு கட்ட சட்டத்தில் திருத்தம் செய்வது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. ஆனால், ஒரு கட்டுப்பாடற்ற அணுமுறையுடன் செயல்ப்படுத்தப்பட வேண்டும்.