டெல்லி : இந்திய-சீனா எல்லைப் பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடி அரசு பொய் சொல்கிறது என்று பாஜக மூத்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி கூறினார்.
அப்போது, சீனாவைச் சேர்ந்த யாரும் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்று கூறப்படுவது அனைத்தும் பொய் என்றும் சுப்பிரமணியன் சாமி கூறினார்.
சுப்பிரமணியன் சாமி பிரத்யேக பேட்டி
இது குறித்து சுப்பிரமணியன் சாமி ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ சீன விவகாரத்தில் ஊடுருவல்கள் இல்லை என்று மத்திய அரசு பொய் கூறுகிறது. ஆனால், இவர்கள் எதற்காக பொய் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் கேட்பது சீனா நம் எல்லையைத் தாண்டிவிட்டதா இல்லையா என்பதுதான். பதில் சொல்ல மறுத்து சீனா அத்துமீறி நுழைந்துவிட்டதாக... ஏற்கெனவே மறைமுகமாகச் சொல்லிவிட்டீர்கள்.
இல்லையென்றால், தேசப் பாதுகாப்புப் பிரச்சினை என்று ஏன் சொல்கிறீர்கள்?. மேலும், 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்தியப் போரைப் போன்ற வரலாறு மீண்டும் நிகழக்கூடும் என்று பிரதமர் பயப்படலாம். நாம் பலவீனமானவர்கள் அல்ல, ஆனாலும் பயப்படுகிறோம். ஊடகங்கள் கூட சாத்தியமான ஆபத்துகளுக்கு திரை போட முயல்கின்றன. உண்மையில் எலி கடித்தது போல சீனா நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கடிக்கிறது.
நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 14ஆவது சுற்று இராணுவ பேச்சுவார்த்தையால் எதுவும் நிகழப் போவது இல்லை. நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்திருந்தால், அவர் போப்பைக் கட்டிப்பிடித்திருக்க மாட்டார். அவரை இங்கு அழைப்பது முற்றிலும் தேவையற்றது. அவர் கிறிஸ்தவத்தைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு என்ன செய்தார்?
நாம் ஏன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயந்து ஓடிவிட்டோம்? முன்பு அவர் (பிரதமர் மோடி) செய்த கண்ணை கவரும் விஷயங்கள் இப்போது மங்கிவிட்டன. இனி இதுபோன்ற விஷயங்களுக்கு அவர் நடைமுறையில் தயாராக இல்லை” என்றார்.
மேலும் பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய சுப்பிரமணியன் சாமி, “பாஜகவை வேறு எந்த அரசியல் கட்சியாகவும் மாற்ற வேண்டாம் என்று நான் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
ஆர்எஸ்எஸ் நினைத்தால்..
பாஜக எப்போதும் வலுவான குழுவாக செயல்படும் போதுதான் சுமுகமாக இயங்கும். ஆனால், மோடி அவ்விவகாரத்தில் தவறு செய்கிறார்; தன்னை மட்டுமே முன்னிறுத்த முனைகிறார்” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத், நரேந்திர மோடி தனியாக 18 முறை சந்தித்தார். அவர்கள் ஏற்கனவே டெப்சாங்கைக் கைப்பற்றியிருப்பது அவருக்குத் தெரியாதா?” என்று வினவினார்.
தொடர்ந்து, காந்திகள் காங்கிரஸின் முகமாக மாறியது போல், நரேந்திர மோடி பாஜகவின் முகமாக மாறிவிட்டாரா? என்ற கேள்விக்கு, “இதெற்கெல்லாம் ஊடகவாதிகளான நீங்கள்தான் காரணம். அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலும் இப்படிதான் சொன்னார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் யாரையும் தலைவராக மாற்றும் என்பதுதான் உண்மை. இதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். பாஜகவின் வெற்றிக்கு எந்த ஒரு நபரையும் காரணம் காட்ட முடியாது.
2022 சட்டப்பேரவை தேர்தல்
ஆர்எஸ்எஸ் தான் கட்சியின் முதுகெலும்பு, பாஜகவின் வெற்றிக்கு அதுவே உதவும்” என்றார். இதையடுத்து 2022 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “இதில் முழுக் கவனம் செலுத்தவில்லை. இதெல்லாம் கொஞ்ச நாள்கள்தான், பனி உருகும்போது என்ன நடக்கும்?” என்றார்.
இதையும் படிங்க : பாஜகவினர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர் - சுப்பிரமணியன் சாமி