கடந்த மே மாதம் 29ஆம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். மேலும், அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை, சர்வதேச அளவில் தேவைப்படும் அவசர உதவிகளுக்காக ஒதுக்கப்படும் என்றார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த 30 நாள்களில் முக்கிய சீர்திருத்தங்களை உலக சுகாதார அமைப்பு செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ட்ரம்ப் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் எதுவும் நடைமுறைக்கு வராததால், உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ அமைப்பிலிருந்து, அமெரிக்கா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியேறியது. பிரபல அமெரிக்கா எழுத்தாளரும் யுனெஸ்கோவின் முதல் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான ஆர்க்கிபால்ட் மக்லீஷ் யுனெஸ்கோவின் அரசியல் அமைப்பிற்கு முன்னுரையை எழுதினார்.
அதில் “போர்கள் குறித்து மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியபோதே, பாதுகாப்பும் அமைதியும் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை மனிதர்களிடையே உருவாகத் தொடங்கியது” என்று அந்த முன்னுரையில் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் நிலுவைத் தொகையில் உள்ள சிக்கல், அமைப்பில் செய்ய வேண்டிய அடிப்படை சீர்திருத்தங்கள், இஸ்ரேலுக்கு எதிரான இந்த அமைப்பின் தொடர் போக்கு ஆகியவற்றைக் காரணமாகக் கூறி, அமெரிக்கா யுனெஸ்கோவைவிட்டு வெளியேறியது.
அதைத்தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் வெளியேறியது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் ஐநாவின் 60ஆவது உச்சி மாநாட்டில் ஒருமனதாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம், மனித உரிமைகள் கொடூரமாக ஒடுக்கப்படும் இஸ்ரேல், பலாவ், மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்படக்கூடாது என்ற தீர்மானத்தில் அமெரிக்கா வாக்களித்தது.
கடந்த 2006-2009ஆம் ஆண்டு காலகட்டத்தில், "பாலஸ்தீனம் உள்ளிட்ட பிற ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பிரதேசங்களில், மனித உரிமை சூழ்நிலைகள்" ஆகியவை குறித்து இந்த அமைப்பு செயல்படும் முறைகளையும் விதிகளையும் மனித உரிமைகள் ஆணையம் வகுத்தது. இப்படி ஒரு முடிவை எடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையம், இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட காலமாக செயல்படுவதாகக் கூறி, அமெரிக்க வெளியேறியது என்பது முரண்.
இவை எல்லாவற்றையும்விட உலக சுகாதார அமைப்பைவிட்டு அமெரிக்கா வெளியேறியதற்கான காரணம்தான் இதுவரை யாருக்கும் புரியவில்லை. ட்ரம்ப் முன்வைத்த அந்த முக்கிய சீர்திருத்தங்கள் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அதிபர் ட்ரம்ப்,”உலக சுகாதார அமைப்பு சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது” என்றும், “கரோனா வைரஸை சீனா அலுவலர்கள் முதலில் மறைக்க முயன்றபோது, இந்தத் தொற்று குறித்து சர்வதேச நாடுகளை தவறாக வழிநடத்த உலக சுகாதார அமைப்புக்கு சீனா அழுத்தம் கொடுத்தது” என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இருப்பினும், கடந்த ஜனவரி 24ஆம் தேதி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடிவருவதாக அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். அதேபோல பிப்ரவரி 29ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி, குறிப்பிட்ட இடத்தில் அதிகளவிலான மக்களுக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பிற்கு சீனா தெரியப்படுத்தியது. அதற்கு மறுநாளே சீனாவுக்கு உதவும் வகையில், மேலாண்மைக் குழுவை அங்கு அனுப்பியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை உலக சுகாதார அமைப்பின் 34 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவில் அமெரிக்காவும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு பிப்ரவரி மாதம் 3 முதல் 6ஆம் தேதி வரைக்கூடியது. அதில் கோவிட்-19 தொற்று குறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு விளக்கப்பட்டது.
இருப்பினும், கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் முன்மொழிந்த அட்மிரல் பிரட் ஜிரோயர் பங்கேற்கவில்லை. அவர் மே 22ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில்தான் முதல்முதலில் கலந்துகொண்டார்.
அதில் பிரட் ஜிரோயர் இதுபோன்ற தொற்றுகள் மீண்டும் ஒருபோதும் ஏற்படாமலிருக்க ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான, விரிவான நடவடிக்கைகளை தேவை என்பதை வலியுறுத்தினார். உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பதால், முதல் முதலில் உலக சுகாதார அமைப்பில் சேர, கடந்த 1948ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த இரண்டு நிபந்தனைகளை அந்நாடு பூர்த்தி செய்ய வேண்டும்.
முதலில் விலகுவது குறித்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு முன் உலக சுகாதார அமைப்புக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதன்படி அமெரிக்காவால், அடுத்தாண்டு( 2021) தான் உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலக முடியும்.
இரண்டாவது, இந்த நிதியாண்டில் வழங்குவதாக உறுதியளித்த அனைத்து நிதிகளையும் அமெரிக்கா கண்டிப்பாக உலக சுகாதார அமைப்புக்கு வழங்க வேண்டும். எனவே, அதிபர் ட்ரம்ப் இந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதி சர்வதேச அளவில் தேவைப்படும் அவசர உதவிகளுக்காக ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தாலும், அது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பின்னர்தான் நடைபெறும்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2020-21 காலகட்டத்தில் அமெரிக்கா அதன் கட்டாயப் பங்களிப்பு நிதியாக, 236.9 மில்லியன் டாலர்களையும், தன்னார்வ பங்களிப்பாக 656 மில்லியன் டாலர்களையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய பங்களிப்பாளராக (சுமார் 22 விழுக்காடு) அமெரிக்கா உள்ளது.
அமெரிக்காவின் பங்களிப்பின் பெரும்பகுதி (27.4 விழுக்காடு) போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு செலவிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்கு, 17.4 விழுக்காடும், தடுப்பூசி மற்றும் தடுக்கக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த 7.7 விழுக்காடும், காச நோய்க்கு 5.74 விழுக்காடும் செலவிடப்படுகின்றது.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது என்பது சுகாதார பிரச்னைகளில் சர்வதேச ஒத்துழைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், மற்ற உறுப்பு நாடுகள் இதில் தலைமை தாங்கும் வாய்ப்பையும் வழங்கும். கோவிட் -19 தொற்றுக்கு ஒரு தடுப்பூசியை உருவாக்கி, அதை உலக நாடுகளுக்கு விநியோகிப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் அத்தகைய பொறுப்புக்கு முன்மொழியப்பட்டன. இந்தியா உட்பட 130 நாடுகளால் நிதியுதவி செய்யப்படும் இந்த கோவிட் -19 தீர்மானம், 2020 மே 19ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பன்முகத்தன்மையை ட்ரம்ப் நிர்வாகம் கையாண்டதற்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் கையாண்டதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் அடிப்படை வேறுபாடு என்பது, கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் நிரந்தர ஐநா பிரதிநிதி சூசன் ரைஸ் மனிதவள மேம்பாட்டு ஆணையத்தில் அளித்த அறிக்கையில் பிரதிபலிக்கிறது.
அவர், “இந்த அமைப்பு பக்கசார்பாக இருந்து ஒன்றை நிராகரிப்பதைவிட, சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு இதை செயல்பட வைப்பதே மேலானது" என்று தெரிவித்திருந்தார்.
உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிப்பதை அமெரிக்கா நிறுத்துவது என்பது களத்தில் பல்வேறு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். நிதியை நிறுத்துவது குறித்த மே 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு முன்னரே, கோவிட்-19 மற்றும் போலியோ ஆகிய தொற்றுகளை சமாளிக்க ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா, பாகிஸ்தான், சிரியா, சூடான், துருக்கி ஆகிய ஏழு நாடுகளுக்கு நிதி அளிக்கவுள்ளதா அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த உலக சகாதார அமைப்பு மற்றும் ஐநாவுடன் பல்வேறு சவால்களை நாம் சமாளிக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நெருக்கடியைச் சமாளிக்க, இதுபோன்ற ஒரு சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா பெற்றிருந்தது. அப்போது, சிப்லா என்ற இந்திய மருந்து நிறுவனம் எய்ட்ஸை எதிர்கொள்ள மலிவு விலையில், ஜெனிரிக் மருந்துகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு இயக்குநராக மே மாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்பை நிலைநிறுத்துவும் இந்தியாவின் பங்கு ஒரு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.
தற்போது இந்தியாவில் பணிபுரியும் 1,600 நிபுணர்களின் பணிகளை மேற்பார்வையிடும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய அலுவலகத்திற்கும் (SEARO), இந்தியாவுக்கும் இதன் மூலம் இணக்கம் மேம்படும்.
இதையும் படிங்க: கரோனா இதய பாதிப்புகளை அதிகரிக்குமா?