தகவல் தொடர்புக்கு, தகவல் பரிவர்த்தனைக்கு இந்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் (இந்தியன் அசோசியேஷன் ஃபார் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ் – ஐஏசிஎஸ்) விடுத்திருக்கும் ஒரு சுற்றறிக்கைக்கு எதிராகப் பெரும் அதிருப்தியும், சலசலப்பும் சர்ச்சையும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த ஆணை எவ்வளவு தூரம் அறிவுப்பூர்வமானது; எவ்வளவு தூரம் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியது, எவ்வளவு தூரம் செயல்படுத்தக் கூடியது என்ற கேள்விதான் இப்போது பரபரப்பாக உலா வந்துகொண்டிருக்கிறது.
விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் தற்காலிகப் பதிவாளர் புர்பாஷா பாந்தோபாத்யாய கையெழுத்திட்டு அனுப்பியிருக்கும் அந்தச் சுற்றறிக்கை மார்ச் 19ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன் பிரதிகள் துறைத் தலைவர்களுக்கும், டீன்களுக்கும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில், பிரிவுகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் அந்த ஆணை மாபெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.
மத்திய உள் துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழித் துறை விதித்திருந்த ஆட்சிமொழி இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இது சம்பந்தமாக விஞ்ஞானம், தொழில்நுட்பத் துறை (டிபார்ட்மெண்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி – டிஎஸ்டி) விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அந்தச் சுற்றறிக்கைச் சொல்கிறது.
ஆட்சிமொழி (இந்தி) நடைமுறையில் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய விஞ்ஞானம், தொழில்நுட்பத் துறை அலுவலர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திற்கு விஜயம் செய்ய இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அந்த ஆணை சொல்கிறது. ஆட்சிமொழிப் பயன்பாடு சம்பந்தமாக எட்டு பகுதிகளைச் சுற்றறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது.
தகவல் தொடர்பில், தகவல் பரிமாற்றத்தில் 55 விழுக்காடு இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இந்தியில் வரும் கடிதத்திற்கு இந்தியிலேயே பதில் எழுத வேண்டும் என்றும் அறிக்கைச் சொல்கிறது. கோப்புகளில் வரும் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும்; கூடிய மட்டும் சர்வீஸ் நோட்டுகளில் குறித்து வைக்கப்படும் எண்ட்ரிகள் இந்தியிலேயே எழுதப்பட வேண்டும். ஆட்சிமொழிச் சட்டம் பிரிவு 3(3)இன்படி, அலுவலகக் கையெழுத்துகள் இந்தியில் மட்டுமே இடப்பட வேண்டும். இவை எல்லாம் அந்தச் சுற்றறிக்கையில் விதிக்கப்பட்ட கட்டளைகள்.
இந்த ஆணைகளை நடைமுறையில் கண்டிப்பாக, கவனமுடன் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்திற்கு விஞ்ஞானம், தொழில்நுட்பத் துறை அலுவலர்கள் விஜயம் செய்யும்போது ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தைத் தவிர்க்க முடியும் என்று ஆணைமடல் வலியுறுத்துகிறது.
எனினும் இந்த ஆட்சிமொழி ஆணைக் கடிதம் பல்வேறு தரப்புகளில் கோபத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கியிருக்கிறது. இந்த ஆணை நியாயமற்றது; என்ன விலை கொடுத்தாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது; ஆதரிக்க முடியாது என்று ஷிஸெண்டு முகோபாத்யாய என்னும் புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சொல்லி இருக்கிறார். “இந்தியைப் பயன்படுத்து என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது; கட்டளை இடமுடியாது. ஏனென்றால் இந்தி எங்களின் ஆட்சிமொழி அல்ல; இந்தியும் ஆங்கிலமும் சமத்துவமான முக்கியம் கொண்ட மொழிகள்தான். ஆனால் இந்தி பேசாத மக்கள்மீது ஏன் இந்தி திணிக்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று கருத்து தெரிவித்தார் அவர்.
மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஓர் ஆட்சிமொழிதான். தேசத்தின் தேசிய மொழி அல்ல அது. ஏன் எல்லோர் மீதும் இந்தி திணிக்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு விளக்கம் சொல்லியாக வேண்டும் என்று சொன்னார் கல்வியாளர் பபிட்ரா சர்கார். மரபு ரீதியிலான அமைப்பான விஞ்ஞான அபிவிருத்திக் கழகத்திடமிருந்து இந்த மாதிரியான ஓர் ஆணையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
சிஸ்டர் நிவேதிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் விஞ்ஞானியுமான பிஜியோதி தத்தாவும் இந்த ஆணையின் மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். “இது ஒரு விசித்திரமான கட்டளை. விஞ்ஞானிகள் சமூகத்திலிருக்கும் அறிஞர்கள் கடல்கடந்த தேசங்களோடு தகவல் தொடர்புப் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அது ஓர் இயல்பான விஷயம். பின் எப்படி அவர்களால் 55 விழுக்காடு தகவல் தொடர்பை இந்தியில் செய்ய முடியும்? இந்தியில் வாசிக்கவும், பேசவும், எழுதவும் இயலாதவர்களுக்கு இது ஓர் அநியாயமான, நேர்மையற்ற ஆணை,” என்று அவர் சொன்னார்.
வங்காள மொழியின் ஆதரவுச் செயல்பாட்டு இயக்கமான ‘வங்காள போக்கோ’ உறுப்பினர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழக அலுவலகத்தின் முன்பு புதன்கிழமை மதியம் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இயக்கத்தின் சார்பில் கெளசிக் மைட்டி, ”விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் இந்தி ஆராய்ச்சிக் கழகமாக மடைமாற்றம் செய்யப்பட வேண்டுமா அல்லது நிறமாற்றம் செய்யப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ”இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதுதான் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கும் இந்த ஆணைக்கு அர்த்தம். அப்படி என்றால் அறிவுக்குப் பொருந்தாத, முட்டாள்தனமான, மூடத்தனமான செயல் இது” என்று அவர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.