கடந்த ஏழு மாதங்களாக கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்திற்கு ஒரு முடிவே இல்லாதது போலத் தோன்றுகிறது. இதே நிலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதின் மூலம் இந்தியாவுக்கு தீவிர அழுத்தம் கொடுத்து பொருளாதார ரீதியாக இந்தியாவைப் பலவீனப்படுத்தி விடும் ஒரு நீண்டகால இலக்குடன் சீனா முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. பிரிகேட் கமாண்டர்களின் லெவலில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல தடவை பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன.
வெளியுறவுத் துறை அலுவலர்களின் மட்டத்திலுல் பல்வேறு விவாதங்கள் நடந்தேறிவிட்டன. ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த மாதிரியான நிலை தொடருவது யாருக்கும் நல்லதல்ல என்று பாவனை செய்துகொண்டே அந்த நாடு தன் தீய சதித்திட்டங்களைத் தொடந்து செய்துகொண்டிருக்கிறது. எல்லைக் கோட்டில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியைப் பேண வேண்டும் என்ற தீர்மானத்திற்குச் சம்மதித்துவிட்டு, எதிர்காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்த அது புதிய ஏவுகணைப் பாதாள அறைகளை மண்ணில் அமைத்து கொண்டிருக்கிறது,
எப்போதும் உஷார்
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சீனா அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பதற்றமான பகுதியாக மாறிவிட்ட பியாங்யாங் ஏரிப் பகுதியிலிருந்து ஓர் அங்குலம் கூட அது பின்வாங்கிச் செல்லவில்லை.
அறுபதாயிரம் படைவீரர்களை அங்கே நிறுத்தியதோடு அல்லாமல், அருணாச்சலப் பிரதேசத்திலும், இந்திய-திபெத் எல்லை அருகிலும் அது புதிய கிராமங்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இதை சில நாட்களுக்கு முன்பு இந்திய கமாண்டர்-இன்-சீஃப் உறுதிப்படுத்தியிருக்கிறார். டொக்லாம் ஏரியாவில் சீனப்படைகளின் நடவடிக்கைகளை இந்தியப் படைகள் இடைவிடாமல் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஹான் சீன மக்களையும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும், எல்லைகளில் ராணுவப் படைகள் இல்லாத திபெத் பகுதிகளில் கொண்டுவந்து நிறுத்த சீனா ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் தென் சீனக் கடலின் மீதான தன் உரிமையை நிலைநாட்ட அது மீனவர்களைத் திரட்டி அங்கே அனுப்பிவைத்தது. இமாலயத்தில் ஊடுருவலை அதிகரிக்கும் பொருட்டு அது கால்நடை மேய்ப்பர்களைப் பயன்படுத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
சீன எல்லைக்கருகே கிழக்கு லடாக்கில் இந்தியா கிட்டத்தட்ட 50,000 படைகளை நிறுத்திவைத்திருக்கிறது; ஏனென்றால் எல்லைத் தகராறுப் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போது அந்தப் பகுதியில் சீதோஷ்ணநிலை மைனஸ் 20-லிருந்து மைனஸ் 40 பாகை செல்ஷியஸ் வரை நிலவுகிறது; கனத்த பனிப்பொழிவும் இருக்கிறது. கடுமையான குளிர் வானிலையைத் தாங்குவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் ராணுவ வீர்ர்களுக்கு நம் தேசம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நவீன கதகதப்பான ஆடைகளையும் இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த 30 வருடங்களாக, நம் ராணுவம், கிட்டத்தட்ட இணையான குளிர்ப்பிரதேசங்களான சியாச்சின்-கார்கில் பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் இதே தட்பவெப்ப நிலைமையில் பாகிஸ்தானோடு மூன்று தடவை போர் செய்த அனுபவம் நமக்கிருக்கிறது. தற்போதைய நிலைக்கு ஈடுகொடுத்து நம் ராணுவம் செயல்படுகிறது; ஆனால் இந்தமாதிரி அனுபவம் எதுவும் சீனாவுக்கு ஏறக்குறைய 40 வருடங்களாகவே இல்லை என்பதால், அந்த நாட்டிற்குச் சோதனைதான். தன் வீரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அது போராடிக் கொண்டிருக்கிறது. தரமற்ற ஆடைகள் வேகவேகமாக வழங்கப்படுவதால் சீனா ராணுவத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கொடுங்குளிர் புதிது என்பதால், பல வீரர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் அவர்கள் தங்கள் படைகளைவேறு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்சார்பு அவசியம்
பாகிஸ்தானின், சீனாவின் அராஜகங்களைத் தடுத்துப் போரிட இன்னும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டியது அவசியம். நவீன ஆயுதங்களால் நம் படையைப் பலப்படுத்துவதோடு, களத் தந்திர உபாயங்களில் படுவேகமாக நிபுணத்துவத்தை அடைவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே நம்நாடு பழிக்குப் பழிக்கு என்ற வகையில் 210 சீன செயலிகளை மூன்று தவணைகளில் தடைசெய்திருக்கிறது. பொருளாதார ரீதியாக அந்த நாட்டின்மீது மேலும் அழுத்தம் தரும் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். நம் ஏற்றுமதிகளை விட மூன்றுமடங்கு அதிகம், சீனாவிலிருந்து நாம் செய்யும் இறக்குமதிகளின் மதிப்பு. அதனால் நாம் இறக்குமதிப் பொருட்களுக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்க வேண்டும்;; அந்தப் பொருட்கள் இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கும்படியான வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட ‘க்வாட்’ அல்லது ‘க்வாட்ரிலேட்டரல் என்ற அமைப்பு அந்த ‘சீனாவின்’ பரவலைத் தடுக்க பலமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, பாகிஸ்தானோடும், சீனா அல்லாத மற்றைய எல்லை நாடுகளோடும் நம்நாடு தூதரக உறவுகளை அவசரமாக மேம்படுத்துவது அவசியம்.
பாகிஸ்தானோடு சதி
அமெரிக்கா கிட்டத்தட்ட பொருளாதார உதவியை நிறுத்தியதாலும், நவீன ஆயுதங்களை வழங்க மறுத்துவிட்டதாலும், தீவிரவாதத்தின் புகலிடமாக ஆகிவிட்ட பாகிஸ்தான் சீனாவிடம் தஞ்சம் புகுந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, சீனா பாகிஸ்தான் பகுதியிலிருந்து நம்மைச் சீண்டிப் பார்க்கும் தந்திரத் திட்டங்களைத் தயார்ச் செய்துகொண்டிருக்கிறது. இதன் ஓர் அங்கமாக, 70 பில்லியன் டாலர் செலவில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சீனா-பாகிஸ்தான் எகானமிக் காரிடரின் படி, சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அந்தக் காரிடரைப் பாதுகாக்கும் முகாந்திரமாக, அந்த இரண்டு நாடுகளும் 25,000 படைகளை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷீரிலும், பாகிஸ்தான் – இந்தியா எல்லையிலும் நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கின்றன. சீனா பாகிஸ்தான் ராணுவத்தை அதிநவீன ஆயுதங்களால் பலப்படுத்திவிடும். அந்தக் காரிடர் தயாரானவுடன், இந்தியப் பெருங்கடலை படுவேகமாக அடைய சீனாவால் முடியும். மேலும், அது பாகிஸ்தானுக்கு எட்டு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு பாதுகாப்பு ஹெலிகாப்டரையும் விற்க முடிவு செய்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தானில் ஓர் அலுவலகத்தை அமைத்திருக்கிறது. சைபர், எலக்ட்ரானிக் யுத்தத்திற்கான எல்லா வசதிகளையும், நவீன கண்காணிப்பு வசதிகளையும் ஏற்படுத்துவது அந்த அலுவலகத்தின் நோக்கம்.
இவையெல்லாம் எல்லா வழிகளிலும் இந்தியாவுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக சீனா தீட்டிக் கொண்டிருக்கும் சதித் திட்டங்கள்.