பிரதிநிதிகள் சபையைக் கலைக்க எந்தவொரு அதிகாரத்தையும் 2015இல் நடைமுறைக்கு வந்த நேபாள அரசியலமைப்புச் சட்டம் பிரதம அமைச்சரான ஷர்மா ஒலிக்குத் தரவில்லை என்று ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.
ஒலியின் வரம்பற்ற அதிகாரம்
பிரிட்டன் நாட்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பாணியிலான ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் நேபாளத்தின் பிரதம அமைச்சர் என்ற முறையில் தான் விரும்பிய போதெல்லாம் கீழ்சபையைக் கலைத்துவிட்டு இடைத்தேர்தலைக் கொண்டுவரும் வரம்பற்ற அதிகாரம் தனக்கிருப்பதாகப் பொதுவெளியில் பேசிக் கொண்டிருந்த ஷர்மா ஒலிக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எரிச்சலைத் தந்தது. அவரது கருத்துக்கு முற்றிலும் ஒரு முரணாகவும் அது அமைந்தது.
பிப்ரவரி 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அவர் சொன்னதும், செய்ததும் தவறு என்று ஆணித்தரமாக நிரூபித்துவிட்டது. பிரதிநிதிகள் சபைக் கலைப்புக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய அவரது மேனாள் நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களையும், எதிர்க்கட்சியான நேபாளக் காங்கிரஸ் கட்சிக்காரர்களையும், குடிமைச் சமூகத் தலைவர்களையும், பல்வேறு தரப்பினரையும் நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தீர்ப்பை வரவேற்ற அவர்கள் கலைக்கப்பட்ட சபை மீண்டும் உயிர்ப்போடு வருவதைக் கொண்டாடுவதில் படுமும்முரமாக இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, சபை மீண்டும் 13 நாள்களுக்குள் – அதாவது, மார்ச் 8ஆம் தேதிக்குள் – கூட வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் ஒன்று நிச்சயம்: பிரதம அமைச்சர் கேபி ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அவர் முன்னாள் தோழர்களின் கோபத்திற்கும், மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சினத்திற்கும் ஆளாக வேண்டிவரும். அதாவது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்.
நேபாள அரசியல் இந்தியாவுக்கு எப்படி முக்கியம்?
இந்தியாவும், நேபாளமும் சுமார் 1,800 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு திறந்தவெளி எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த எல்லைப் பகுதியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக இந்தியாவில் பலர் நினைக்கிறார்கள். இந்தியாவும், நேபாளமும் நாகரிகம், வரலாறு, பூகோளம், பண்பாடு, சமயம் ஆகியவற்றைச் சார்ந்த சிறப்பான உறவுகளைப் பகிர்ந்துகொண்டிருப்பதால், இயற்கையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நேபாளத்தில் ஏற்படும் எல்லாவிதமான தடாலடி நிகழ்வுகளும் இந்தியாவின் மீது மிதமானதிலிருந்து அதிக அழுத்தமானது வரையிலான தாக்கங்களை உருவாக்கக் கூடியவை.
இப்போதிருக்கும் சூழலில் கே.பி. ஷர்மா ஒலியை டெல்லியில் பலருக்குப் பிடிப்பதில்லை. ஏனென்றால் அவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நேபாளம் புதியதொரு புவியியல் வரைபடத்தை வெளியிட்டது.
கைலாஷ் மலைக்கும், மானசரோவருக்கும் தெற்கே சீனா-இந்தியா-நேபாளம் என்ற முச்சந்தி எல்லைக்கு அருகே இருக்கும் மலைப்பிரதேசமான லிபுலெக்-காலாபாணி-லிம்பியதுரா ஆகிய சர்சைக்குள்ளான பகுதிகள் அந்த வரைபடத்தில் அடங்கி இருந்தன. பின்னர் நேபாள நாடாளுமன்றம் அந்த வரைபடத்தை அங்கீகரித்தது. நேபாளத்தின் தேசிய இலச்சினையிலும், அதிகாரப்பூர்வமான பேட்ஜ்களிலும் அது இடம்பெற்றது.
நேபாளத்தின் இந்த நடவடிக்கைகு முன்புதான் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் திட்டம் ஒன்று 2020 மே மாதம் 8ஆம் தேதி அன்று தீட்டப்பட்டது. காலாபாணி பகுதியிலிருந்து லிபுலெக்-கிற்கு ஒரு ஜீப் பாதையைத் திறந்து வைப்பதுதான் அந்தத் திட்டம். லிபுலெக்கின் நிலப்பகுதியை நீண்ட காலமாகவே நேபாளம் உரிமை கொண்டாடி இருந்தது. பிரிட்டன் இந்தியாவுக்கும், நேபாளத்திற்கும் 1816இல் ஏற்பட்ட சுகெளலி ஒப்பந்தத்தின்படி நேபாளம் அந்த எல்லைப் பகுதியை உரிமை கொண்டாடியது. டெல்லியும் காத்மாண்டுவும் (இந்தியாவும், நேபாளமும்) தங்கள் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னும் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்காமல் இருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில் நேபாளத்தில் சாத்தியமாகக் கூடிய அரசியல் உறுதியின்மை அதன் அண்டை நாடுகளான இந்தியா, சீனாவைவிட மிக அதிகமாகவே அதன் மக்களைத் தாக்கலாம் என்ற புதிய கவலைகள் இப்போது உண்டாக ஆரம்பித்துவிட்டன.
1996 லிருந்து 2007 வரை ஒரு தசாப்த காலமாக நடந்த மாவோயிஸ்ட்டுகளின் பயங்கரவாதப் போரில் 17,000 மக்கள் உயிரிழந்தனர். அந்த வலியையும், காயங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் நேபாளத்தால் 2015ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிர்ணய சபை எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை இன்னும் முழுவதுமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அந்தச் சபைக்கான தேர்தல் இருமுறை நடந்தேறிவிட்டது. முழுமையானதொரு பொருளாதார மீட்சியை நேபாளம் இன்னும் அடையவில்லை. நாளுக்கு நாள் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சவிகிதம் வேறு ஏராளமான இளைஞர்களையும், இளம்பெண்களையும் எல்லைத் தாண்டவைத்து இந்தியாவுக்குள்ளும், மற்ற நாடுகளுக்குள்ளும் நுழைந்து வேலைக்கான வாய்ப்புகளைத் தேட வைத்துவிட்டது.
இது சீனாவுக்கு ஏன் முக்கியம்?
தற்போது உலக கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் நேபாளத்தின் அதிரடி நிகழ்வால் சீனா கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. மிக உயர்ந்த இமயமலைத் தடுப்பால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நேபாளமும், சீனாவும் சுமார் 1,400 கிலோமீட்டர் தூரத்து எல்லையைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அமைதியாகவும், சர்ச்சையின்றியும் இருக்கிறது அந்த எல்லைப் பகுதி.
ஆனாலும் ஆதிகாலத்தில் புகழ்பெற்றிருந்த பட்டுச் சாலைகளில் (சில்க் ரூட்ஸ்) தற்போது சீனா உருவாக்க முயற்சிக்கும் ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷேயிட்டிவ்’ (பிஆர்ஐ) – பெல்ட், சாலைத் திட்டம் – என்பதில் இணையுமாறு நேபாளத்தை சீனா வலியுறுத்துகிறது; கெஞ்சுகிறது; கொஞ்சுகிறது. சீனாவின் இந்த முன்னெடுப்பை, முனைப்பை நேபாளம்கூட விரும்பத்தான் செய்கிறது.
சமீபகாலமாக பெய்ஜிங்கிலிருந்து காத்மாண்டுவுக்கு உயர்மட்ட அலுவலர்களின் விஜயங்கள் அதிகரித்திருக்கின்றன. அவற்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விஜயமும் அடங்கும். சீனக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் உள்பட சீன அலுவலர்கள் திரும்பத் திரும்ப நேபாளத்து கம்யூனிஸ்ட் தலைவர்களை ஒற்றுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நேபாளத்தின் ஆளும் கட்சியான சிபிஎன் (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் நேபாள்) இப்போது செங்குத்தாகப் பிளந்துகிடப்பது போலிருக்கிறது. கேபி ஷர்மா ஒலிக்கும், மேனாள் மாவோயிஸ்டுத் தலைவர் பிரச்சந்தாவுக்கும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூட்டாட்சி, பிராந்திய தேர்தல்களுக்கு முன்பு உண்டான கூட்டணியால் விளைந்தது கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் நேபாள் (சிபிஎன்). அந்தக் கூட்டணி பெய்ஜிங்கிற்கு ஓர் ஆனந்தமான ஆச்சரியத்தைத் தந்தது.
ஏனெனில் பல்லாண்டுகளாகவே பெய்ஜிங் அந்த மாதிரியானதோர் ஒற்றுமை உருவெடுப்பதைப் பார்க்க விரும்பியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே நேபாளத்திலிருக்கும் பிரபலமான சீன தூதுவர் ஹோவ் யாங்ஷி பிரச்சந்தாவையும், ஷர்மா ஒலியையும், மற்றவர்களையும் ஒற்றுமையாக இருக்கும்படி தூண்டிக் கொண்டே இருந்தார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரச்சினைகள் வெடித்தபோது, குறிப்பாக ஷர்மா ஒலிக்கும், பிரச்சந்தா, மாதவ் குமார் நேபாள் குழுக்களுக்கும் இடையே மோதல் வெடித்தபோது, அந்தப் பூசலில் தலையிட்டு சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த ஹோவ் சமீபகாலமாக மிகவும் சுறுசுறுப்போடு பணியாற்றினார்.
ஆனால் அந்தச் சீனப் பெண் தூதர் தன் முயற்சியில் தோற்றுப் போனார். ஏனெனில் உள்கட்சிப் பூசல்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மோசமாகிக் கொண்டே போனது. ஆளும் கட்சியான சிபிஎன்னின் ஒற்றுமை – பெய்ஜிங் ஊக்குவித்து உருவாக்கியதாகக் கருதப்படும் அந்த ஒற்றுமை – துண்டுத் துண்டாய் நார்நாராய்க் கிழிந்து கிடப்பதைப் பார்த்து டெல்லியைப் போலவே சீனாவுக்கும் வருத்தம் இருப்பது போலத் தெரிகிறது.
என்னதான் வழி?
மீளுருவாக்கப்பட்ட பிரதிநிதிகள் சபையான நாடாளுமன்ற கீழ்சபை மார்ச் 8-க்கு முன்பு கூடும்போது, நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபிஎன் அதிகாரப்பூர்வமான பிளவைச் சந்திக்க நேரிடும். அப்போது, ஆசையைத் தூண்டும் ஆட்சி அதிகாரம் கொண்ட பிரதம அமைச்சர் நாற்காலிக்குப் இரண்டு போராளிகள் போட்டியிடுவார்கள். ஒருவர் கேபி ஷர்மா ஒலி; அவரது அணியில் இருக்கும் உறுப்பினர்கள் ஏற்கனவே தற்போதைய அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.
எதிர்முகாமில் இருப்பவர் பிரச்சந்தா. மேனாள் பிரதம அமைச்சர்களான மாதவ் குமார் நேபாளுடனும், ஜால நாத் கனலுடனும் கைக்கோத்து தனது பிடியைப் பலமாக்கிக் கொண்டுள்ளார் பிரச்சந்தா. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களில் 70 விழுக்காட்டினர் தம்மிடம் இருப்பதாக பிரச்சந்தா-மாதவ் நேபாள் அணி உரிமை கோருகிறது. அதை மறுதலிக்கும் ஷர்மா ஒலி தனது அணிதான் ஆகப்பெரியது என்றும், ஆகப்பலமானது என்றும் அடித்துச் சொல்கிறார், ஆணித்தரமாக.
ஆனால் நிஜம் என்னவென்றால் பெரும்பான்மைப் பலம்கொண்ட ஓர் அரசை உருவாக்குவதற்கு சிபிஎன்னில் இருக்கும் எந்த அணிக்கும் பெரும்பான்மை இல்லை. அதனால்தான் எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷெர் பஹதூர் டியூபாவின் உதவியுடன் வசதியான பெரும்பான்மையை உருவாக்கி ஒரு கூட்டணி அரசை அமைக்கலாம் என்ற கனவில், ஷர்மா ஒலி அணியும், பிரச்சந்தா-மாதவ் அணிகளும் டியூபாவுடன் வினயமாக உறவாடுகின்றன; அவரின் அன்பைச் சம்பாதிக்க, அவரின் தயவைப் பெற பிரமப் பிரயத்தனத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றன அந்த அணிகள்.
அரசு அமைக்கத் தேவைப்படும் நம்பிக்கை உள்ள கூட்டாளிக்கான தேடல் உக்கிரமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மேனாள் மாவோயிஸ்டுத் தலைவர் பாபுராம் பட்டரையின் தலைமையிலான ஜனதா சமாஜ்பாடி கட்சி போன்ற பிற அரசியல் இயக்கங்களுக்கும் முக்கியத்துவமும், மதிப்பும் அதிகரித்துவிட்டன. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நேபாளத்தில் புதிய அரசு அமைந்துவிட்டால் அதற்குத் தலைமை வகிக்கப் போகிறவர் யார்? அதன் வடிவம், தோற்றம் எல்லாம் எப்படி இருக்கும்? இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வினாக்களுக்கான விடைகள் தெரிந்துவிடும். அதிமுக்கியமான காலகட்டம் இது. நேபாளம் சோதனையான இந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவதற்கு யார் தலைமை ஏற்கப் போகிறார்கள்? பிரச்சந்தாவா, டியூபாவா அல்லது மீண்டும் ஷர்மா ஒலியா?
காத்திருப்போம். விடை காத்திருக்கிறது, காலத்தின் கர்ப்பத்தில்....