காத்மாண்டு: சீனாவின் புதிய பரிசான சினோஃபார்ம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசியின் 800,000 டோஸ் தடுப்பூசிகளை நேபாளத்திடம் ஒப்படைத்தபோது நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நேபாளத்திற்கு, அதன் மக்களை பாதுகாக்க அதிகமான கோவிட் தடுப்பூசி தேவைப்படும் நிலையில் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகள் வாங்குவதற்கு இது வழி வகுக்கக்கூடும்.
செவ்வாய்க்கிழமை காலை நேபாள ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் பெய்ஜிங்கிலிருந்து கோவிட் தடுப்பூசியை கொண்டு வந்தவுடன், அவற்றைப் பெற தூதர் ஹூ யான்கி காத்மாண்டு விமான நிலையத்தை அடைந்தார். பின்னர் தடுப்பூசியை நேபாள சுகாதார அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதியிடம் புன்னகையுடன் ஒப்படைத்து சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் உறுதியளித்தார்.
சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் நேபாள நாட்டில் டெல்லி மற்றும் பெய்ஜிங் ஆகியவை தங்களது தடுப்பூசி இராஜதந்திரத்தை தெளிவாக முடுக்கிவிட்டு வருகின்றன, அங்கு கே.பி ஓலி அரசாங்கம் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓராண்டுக்குள் கோவிட் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்கான திட்டங்களை தொடங்கியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், நேபாளம்-இந்தியா இராணுவ ஒத்துழைப்பு தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு 100,000 டோஸ் கோவிட் தடுப்பூசி கிடைத்தது. ஆனால் சீன தடுப்பூசிகள் வருவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே, நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை பரிசாக இந்தியா ஜனவரி மாதம் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைத்தது.
பின்னர், உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான சர்வதேச முன்முயற்சியான கோவாக்ஸின் கீழ் நேபாளம் அதிக கோவிட் தடுப்பூசிகளை பெற்றது, மேலும் நேபாள சுகாதார அமைச்சகம் நீண்டகால உறவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து இரண்டு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கொள்முதல் செய்யவுள்ளது..
அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடமிருந்து அதிகமான விநியோகங்களை நேபாளம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதற்கான கடுமையாக அழுத்தத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நேபாளம் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது, மேலும் ஒரு வருடத்திற்குள் அதன் 30 மில்லியன் மக்களில் 20 மில்லியனுக்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது.
ஆனால் அதிகமான கோவிட் தடுப்பூசிகளுக்காக நேபாளம் பெய்ஜிங்கைப் எதிர்பார்க்கும் வேளையில், சீனாவிலிருந்து எத்தனை டோஸ் பரிசாகப் பெற முடியும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்டை விட சீனத் தடுப்பூசி விலை அதிகம் என்பதால் எத்தனை டோஸ் மருந்துகளை வாங்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நேபாளத்தின் சுகாதார மற்றும் மக்கள் தொகை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜாகேஷ்வர் கவுதம் கூறுகையில், கோவிட் தடுப்பூசியைப் பெறுவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. எங்கள் மக்களுக்கு போதுமான கோவிட் -19 தடுப்பூசி பெற பல்வேறு முகவர் மற்றும் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
நேபாளம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கோவிட் தடுப்பூசி வாங்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில், உலக வங்கி நேபாளத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது என்று கவுதம் மேலும் கூறினார்.
ஆனால் சீன தடுப்பூசி வந்தவுடனேயே நேபாள நெட்டிசன்கள் உற்சாகமாகி வருகின்றனர். ஒரு காத்மாண்டு பத்திரிக்கையாளார் தனது ட்விட்டரில், “சீன தடுப்பூசியும் பெய்ஜிங்கிலிருந்து வந்துவிட்டது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. இப்போது நாம் ஒரு கையில் இந்திய தடுப்பூசி; மற்றொரு கையில் சீன தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
நகைச்சுவைகளைத் தவிர, ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: வரவிருக்கும் நாட்களில், நேபாளம் கோவிட் தடுப்பூசிகளுக்கு டெல்லி மற்றும் பெய்ஜிங்கை தொடர்ந்து எதிர்பார்க்க வாய்ப்புள்ளது