திருச்சிராப்பள்ளி: உணவு குழாயில் இருந்த அடைப்பை, அறுவை சிகிச்சையின்றி நீக்கி அப்போலோ மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் வரகனேரி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை(57). இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாட்டுத்தீவன கடை நடத்தி வருகிறார். வாந்தி மற்றும் குமட்டலினால் ஆறு மாத காலமாக தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருந்த செல்லதுரை திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்ததில், அவருக்கு “அகலசியாகார்டியா” எனப்படும் அரியவகை நோய் உள்ளது கண்டறியப்பட்டது.
“அகலசியாகார்டியா” என்பது உணவுக்குழாய் மற்றும் உணவுகுழாய்க்கும் வயிற்றிற்கும் இடையே இருக்கும் தசைவால்வு, உணவு விழுங்களின் போது நெகிழ்வுதன்மையை இழந்து விடுகிறது. இதனால் உணவு வயிற்றின் உள்ளே செல்வது தடைபட்டு நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, எடைகுறைவு மற்றும் இரவு வாந்தியினால் தூக்கமின்மை ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை அல்லது லேபராஸ்கோபி மூலமாகவே தீர்வு என்ற நிலைமாறி, தற்பொழுது எண்டோஸ்கோப்பி மூலம் அதிநவீன POEM (Per Oral Endoscopic Myotomy) என்ற புதிய சிகிச்சையை, இந்தியாவிலேயே மிக குறைந்த மருத்துவர்களே அளிக்கின்றனர். ஓப்பன் அல்லது லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் வயிற்றை கிழித்து சிகிச்சை கொடுக்கப்படும்.
ஆனால் இதற்கு மாறாக என்டோஸ்கோப்பி மூலமாக தழும்பு மற்றும் வலியில்லாத சிகிச்சை, குறைந்த பட்சநாளில் உடல் தேறல் மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்கிறது. இச்சிகிச்சை அளிக்க மிகவும் குறைந்த மருத்துவ நிபுணர்களே நாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த குடல், கல்லீரல் மற்றும் வயிறு சிறப்பு மருத்துவர் செந்தூரன் தலைமையில், மயக்கவியல் மருத்துவ நிபுணர் கார்த்திக் உதவியுடன் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. சிகிச்சை மூலம் துரித குணமடைந்த நோயாளி மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது ஆறுமாத தூக்கமில்லாத நிலையை கடந்துள்ளார்.