டெல்லி: 2024இல் இந்தியர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாக சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அதார் பொன்னவாலா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிரஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் இம்மருந்தின் இறுதிகட்ட பரிசோதனை நடந்துவருகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் பரிசோதனை செய்துவருகிறது.
இச்சூழலில், சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அதார் பொன்னவாலா நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, “ஆக்ஸ்போர்டு தடுப்பூசியானது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஏப்ரலில் பொதுமக்களின் தேவைக்காக விற்பனைக்கு வரும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 டோஸ்கள் விலை ரூ.1000-க்கு விற்கப்படலாம்.
2024-க்குள் இந்தியாவில் அனைவரும் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்தத் தடுப்பூசி, வயதானவர்கள் மத்தியில் நல்ல பலனளிக்கிறது. இந்தியாவில் தன்னார்வலர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
முழுமையான பலனும் திறனும் இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. இன்னும் பலகட்ட ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கலாம்” என்று கூறினார்.