சென்னை: ஃபிக்கி எனப்படும் இந்திய வணிக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தொழில்நுட்ப அணி சார்பாக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மருத்துவத் துறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன (“Digital Technologies Transforming Healthcare Ecosystem and Creating Opportunities”) என்பது குறித்து இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற்றது.
இஸ்ரேல், எஸ்டோனியா நாடுகள் கூட்டுறவுடன் பங்கேற்ற இந்த இணைய கருத்தரங்கில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் தலைமை உரையாற்றினார்.
மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளில் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும், கரோனா தொற்றை எதிர்கொள்வதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும் அமைச்சர் பேசினார். இதற்காக மாநில அரசு கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைத்தது பற்றியும், இதில் தொழில்துறையினருடன் இணைந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்ட கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் ஆகியவற்றை சரிசெய்வது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
சிறிய கிராமங்கள் வரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படுவது பற்றியும் அவர் விவரித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஃபிக்கியின் இந்தியாவில் டிஜிட்டல் மருத்துவ சேவை பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டார். மேலும் அவர் மெய்நிகர் மருத்துவ தொழில்நுட்பக் கண்காட்சியினைத் திறந்து வைத்தார்.
தொழில்நுட்பம் + மருத்துவம்
இந்நிகழ்ச்சியில் பேசிய செயலாளர் நீரஜ் மிட்டல், கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவ துறையை தானியங்கிமயமாக்க உலகம் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த கருத்தரங்கு மிகவும் முக்கியமானதாகிறது என்றார். மேலும், அடுத்து வரும் காலங்களில் தமிழகத்தில் மருத்துவ கருவிகள் கிடைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
தமிழ்நாடு அரசு இ-சேவை ஆணையர் சந்தோஷ் மிஷ்ரா பேசுகையில் டிஜிட்டல் மருத்துவ சேவைகளை மேம்படுத்த அரசு சார்பில் ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறினார். இ-பார்வை (e-Parvai) சேவை மூலமாக ஊரகப் பகுதிகளில் அரசு மருத்துவ சேவைகள் வழங்குவது பற்றியும் அவர் கருத்தரங்கில் விளக்கினார்.
மக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுவதால் மருத்துவ சேவையை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும் என்றும், இதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்றும் ஃபிக்கியின் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் வெங்கட்ராமன் கூறினார்.
மருத்துவ துறையுடன் தொழிநுட்பம் இணைந்தால் மருத்து சேவையின் தரம் உயர்ந்து, அவற்றின் செலவு குறையும், மேலும் அவை அனைவராலும் அணுகும் வகையில் இருக்கும் என அவர் கருத்து தெரிவித்தார். ஃபிக்கியின் மாநிலப் பிரிவுத் தலைவர் ஸ்ரீதரன் கருத்தரங்கில் இறுதி உரையாற்றினார்.
கேப்பிடல் லேண்ட் நிறுவன சென்னை பிரிவுத் தலைவர் வேலன் இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். இதில், ஃபிக்கி தலைவர் ஜிஎஸ்கே வேலு, ஜோஹோ இணை நிறுவனர் குமார் வேம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் உலகெங்கின் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள், மருத்துவமனை மேலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மருத்துவ துறையுடன் தொடர்புடையவர்கள் கலந்துகொண்டனர்.