உலக நாடுகளில் தற்போது 5ஜி தொழில்நுட்பம் குறித்தும் அதை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆராய்ச்சி பணிகளும் நடைபெற்றுவருகிறது. அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
அதேநேரம், சர்வதேச அளவில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபலமான 4ஜி சேவை, இந்தியாவில் ஜியோவின் வருகைக்குப் பின்தான், கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைந்து. இதனால் இந்தியாவில் 5ஜி சேவையும் தொடங்க தாமதமாகும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், வெஸ்டாஸ்பேஸ் டெக்னாலஜி (Vestaspace Technology) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவில் அடுத்தாண்டு முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண்குமார் சுரேபான் கூறுகையில், "அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்கள், சோதனை முறையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் விண்ணில் ஏவப்படவுள்ளது.
அவை அடுத்தாண்டு தொடக்கத்தில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும். இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்க ஏதுவாக ஒட்டுமொத்தமாக 35 செயற்கைக்கோள்களைச் செலுத்தவுள்ளோம். இதன் மூலம் அனைத்து ஸ்மார்ட்போன்களும் செயற்கைக்கோள்களிலிருந்து நேரடியாக 5ஜி சேவை பெறும். அடுத்தாண்டு தொடக்கத்தில் நாங்கள் சேவையைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.
மேலும், 28 Ghz band 5ஜி அலைக்கற்றை பெறுவது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிரமங்களில் 5ஜி சேவை கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அருண்குமார் சுரேபான், "கிராமங்கள் முழுக்க 5ஜி சேவை கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் எட்டு ஸ்டேசன்களையும் 31 ஆயிரம் டேட்டா ரெசெப்டர்ஸ்களையும் கட்டமைத்துள்ளோம்.
நாங்கள் முதலில் இந்தியாவில்தான் எங்கள் சேவையைத் தொடங்கவுள்ளோம். நாங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எங்கள் சேவையை வழங்குவோம். இதன் மூலம் அவர்கள் பொதுமக்களுக்கு இந்த 5ஜி சேவையை எடுத்துச் செல்ல முடியும்" என்றார்.
இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான வெஸ்டாஸ்பேஸ் டெக்னாலஜியில், அமெரிக்காவின் Next Capital LLC நிறுவனம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்