உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, கடந்த பத்து நாள்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் உக்கிரமடைந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், பல நிறுவனங்கள் தங்களின் பொருள்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யவும், அங்கு விற்பனை செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களை (செல்போன், டாப்லெட், மடிக்கணினி) ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய மாட்டோம் என தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போதைய அரசியல் சுழல் காரணமாக, இன்று (மார்ச் 5) சாம்சங் எல்கட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதிக்கு தயாராக இருந்த சரக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கீவ் இன்டிபெண்டன்ட் என்ற உக்ரைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதில், "சாம்சங் நிறுவனம் போர் பதற்றம் உள்ள பகுதிகளில் நடைபெறும் மனிதநேய செயல்பாடுகளுக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுவியாக வழங்க உள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்க்கும் விதமாக தங்களின் தயாரிப்பு பொருள்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யவும், அங்கு விற்பனை செய்யவும் தடை விதித்திருந்தது. மேலும், ரஷ்யாவில் ஆப்பிள் பே, கூகுள் பே போன்ற சேவைகளும் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.