டெல்லி: அரசின் புதிய கொள்கை முடிவுகளால் ஈர்க்கப்பட்ட இந்திய தகவல் சாதன நிறுவனமான லாவா இண்டர்நேஷனல், சீனாவில் உள்ள தனது அலுவலக செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்ற முடிவுசெய்துள்ளது.
கரோனா நோய்க் கிருமித் தொற்று இந்தியாவைத் தாக்கியதிலிருந்து, பொருளாதார மந்தநிலை, வணிகங்களை கடுமையாக பாதித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்தியாவை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் தனது ஆதிக்கம் செலுத்துகின்றன.
600 பேரை வீட்டுக்கு அனுப்பிய சொமெட்டோ - மற்றவர்களுக்கு 50 விழுக்காடு சம்பளம் கட்!
தொற்றுநோய், நாடுகளுக்கு தன்னிறைவுக்கான முக்கியத்துவத்தை கற்பித்ததும், ஒவ்வொரு நாடும் சீனாவை எவ்வளவு சார்ந்துள்ளது என்பதற்கான சுயப்பரிசோதனையும் மேற்கொள்ள உதவியது. பல சர்வதேச நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில், உள்ளூர் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கவும், 2025 க்குள் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கவும் சுமார் 48,000 கோடி ரூபாய் மொத்த ஊக்கத்தொகை உள்ளடக்கிய மூன்று திட்டங்களை இந்திய அரசு அறிவித்தது. இது இந்திய கைப்பேசி நிறுவனமான லாவா-வின் செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நகர்த்துவதற்காக திட்டங்களை வகுப்பதற்கு உதவியது.
லாவா இன்டர்நேஷனலின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹரி ஓம் ராய், சுமார் 600 முதல் 650 ஊழியர்களைக் கொண்ட தனது தயாரிப்பு வடிவமைப்பு குழுவை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நகர்த்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ போன்ற பிற சந்தைகளுக்கு சீனாவிலிருந்து கைப்பேசிகளை ஏற்றுமதி செய்யும் வேலையை இந்தியாவிலிருந்து தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் கைப்பேசிகளின் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 800 கோடி முதலீடு செய்ய லாவா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.