வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதன் காரணமாக ஐபோன் 11 சீரிஸின் சில மாடல்களும் மற்றும் ஐபோன் 8 சீரிஸ் மாடல்களும் தற்போது விலை உயர்வை சந்தித்துள்ளன. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் ஐபோன் 7, ஐபோன் XR, ஐபேட்(ipad), ஆப்பிள் வாட்ச், மெக் கணினி ஆகியவற்றின் விலை உயரவில்லை.
அதன்படி, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் (64 ஜிபி) இப்போது ரூ 1,11,200 ஆகவும், 256 ஜிபி மாடல் ரூ 1,25,200 ஆகவும், 512 ஜிபி மாடல் ரூ 1,43,200 ஆகவும் இருக்கும். அதேபோல ஐபோன் 11 ப்ரோ (64 ஜிபி) ரூ 1,01,200க்கும்; ஐபோன் 11 ப்ரோ (256 ஜிபி) ரூ 1,15,200க்கும்; ஐபோன் 11 ப்ரோ (512 ஜிபி) ரூ 1,33,200க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. முன்னதாக, ஐபோன் 11 ப்ரோ மாடலின் விலை ரூ 99,900இல் இருந்தது.
ஐபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகளும் சராசரியாக மூன்று விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுங்க வரி காரணமாக ஸ்மார்ட்போன் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகவுள்ள ரியல்மி!