பெருந்தொற்று நோய் பல நாடுகளின் பொருளாதாரங்களைச் சேதப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் தகுந்த இடைவெளி உள்ளிட்ட பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றியமையாதவை.
தற்போதைய நெருக்கடி புதுமையான கல்வி, நிர்வாக மாதிரிகளுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த காலங்களில், தெலங்கானா அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர், பொது அலுவலகங்களையும் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு முறைக்கு ஒப்புதல் அளித்தது.
இன்று(ஜூலை 13), COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு முக்கியப் பகுதியாக, இந்த முடிவு பயனளித்துள்ளது. மேலும், வளர்ந்துள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மைக்கு உதவுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் மண்டல அலுவலகங்கள் மற்றும் செயலகங்கள் ஆன்லைன் நிர்வாகத்தைச் சிறப்பாக செயல்படுத்த தயாராக உள்ளன. சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்களை வழங்கி, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆன்லைன் வழி கற்றலை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில், கேரளா e - Office என்ற வலைப்பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. ஹரியானா அரசும் மின்-அலுவலக முறையை ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தி வருகிறது.
“குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை நிறைவேற்றுவதற்காக, டிஜிட்டல் முறை தொழில்நுட்பம் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் மின்னணு அலுவலகத்தை நிறுவ தயாராக உள்ளது.
இந்த அமைப்பு முறை பணியின் தரத்தை ஊக்குவிப்பதுடன், வேலை நேரத்தையும் குறைக்கிறது. குடிமக்கள் அரசாங்க அலுவலகங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் அவலத்தையும், லஞ்சம் கொடுக்கும் கட்டாயமும் தற்போது தவிர்க்கப்படுகின்றது.
டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும், இந்தியாவை அறிவு பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்குடன் கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசு டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தைத் தொடங்கியது.
நிகழாண்டுக்குள் (2022) ஒவ்வொரு குடிமகனுக்கும் 50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் உலகளாவிய பிராட்பேண்ட் வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வரைவுப் புதிய தொலைத் தொடர்பு கொள்கை இந்தத் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாரத்நெட் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து30 ஆயிரம் கிராமங்களும் 48 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் உண்மையோ கூற்றுக்கு மாறாக உள்ளது. அரசு தெரிவித்த கிராம பஞ்சாயத்துகளில் 8 விழுக்காடு மட்டுமே டிஜிட்டல் முறையில் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனாளிகள் உள்ளனர்.
நாட்டில் 11 விழுக்காடு வீடுகளில் கணினி மற்றும் இணைய வசதி இருப்பதாக ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது. சுமார் 56 கோடி பயணாளிகளுடன் உலகளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால் உலகளவில், மொபைல் பிராட்பேண்ட் வேக குறியீட்டில் இந்தியா 132வது இடத்தில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் தரவரிசையில் இந்தியாவை விட சிறப்பான இடத்தில் உள்ளன. எனவே, டிஜிட்டல் கனவை நனவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: இனி கூகுள் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்!