டெல்லி: இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவைத்துள்ள சியோமியின் ‘மி’ தகவல் சாதன நிறுவனம், தனது புதிய QLED தொலைக்காட்சிப் பெட்டியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை சந்தையில் 22 விழுக்காட்டை கையில் வைத்திருக்கும் ‘மி’ நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன் தொலைக்காட்சிகளை வெளியிடுவதில் திறன்பெற்றது.
இந்நிறுவனம், 2018ஆம் ஆண்டு தனது முதல் LED தொலைக்காட்சிப் பெட்டியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மெல்லிய வெளிச் சட்டம், தெளிவான திரை, பல லட்ச பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள மென்பொருள், திறன்வாய்ந்த இயங்குதளம் என்று புதுமைகளை உள்புகுத்தி இந்திய பயனர்களை திருப்திப்படுத்தியது.
அன்றுமுதல் இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்திற்குப் போட்டியாக பல நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை பயனர் சந்தையில் வெளியிட்டுவருகின்றன. எனினும் ‘மி’ தொலைக்காட்சிக்கென தனி வாடிக்கையாளர்கள், சந்தையில் உள்ளது மறுக்க முடியாதது.
இவ்வேளையில், பல அளவுகளில், எச்.டி., ஃபுல் எச்.டி., 4கே என அனைத்துவிதமான துல்லிய பரிமாணங்களையும் தங்கள் தொலைக்காட்சிகளில் வெளிகாட்டிய ‘மி’, தற்போது உயர்தர பயனர்களுக்கென QLED தொலைக்காட்சியை வெளியிட முனைப்புக் காட்டிவருகிறது.
ஏற்கனவே, விலை குறைந்த LED தயாரிப்புகளை வெளிக்கொணர்ந்துவரும் சீன தயாரிப்புகளான மி, மோட்டோரோலா, ரியல்மீ, டிசிஎல் ஆகியவற்றுடன் இந்திய நிறுவனங்களான வியூ, மைக்ரோமேக்ஸ் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த வரிசையில் முன்னணி நிறுவனங்களாக இருந்த சாம்சங், எல்ஜி, சோனி, பானாசோனிக் இந்தியாவில் சந்தை மதிப்பை இழந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், சியோமி நிறுவனத்தின் இந்தப் புதிய முயற்சி பயனர் சந்தையில் மேலும் போட்டியை உருவாக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.