சான் பிரான்சிஸ்கோ: போலிஷ் வீடியோ கேம் டெவலப்பர் சிடி ப்ரெஜெக்ட் ரெட், தங்களில் புதிய விளையாட்டு தொகுப்பான சைபர்பங்க் 2077ஐ, நவம்பர் 19ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதே நாளில் பிசி, பிஎஸ் 4, எக்ஸ்-பாக்ஸ் ஒன் ஆகியவற்றுக்கு இந்த விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 2019இல் இந்த விளையாட்டுகள் ஸ்டேடியாவுக்கு வருவதாக கூகுள் அறிவித்தது. ஆனால் இறுதி வெளியீட்டு தேதியை வெளியிடாமல் இருந்தது. சைபர்பங்க் 2077 விளையாட்டு ஏப்ரல் 16ஆம் தேதி பிற தளங்களில் தொடங்கப்படுவதாக இருந்தது. இரண்டு முறை தள்ளிபோன வெளியீட்டு தேதி, தற்போது நவம்பர் 19 என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஸ்டேடியா ஸ்டோர் வழியாக சைபர்பங்க் 2077 விளையாட்டை வாங்குபவர்களுக்கு, இலவச டிஜிட்டல் தொகுப்புகள் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதில், விளையாட்டின் கலை கையேடு, அசல் சைபர்பங்க் 2020 மூல புத்தகம், சைபர்பங்க் 2077 குரலொலி காமிக் புத்தகம், அத்துடன் ஒரு டெஸ்க்டாப், மொபைலுக்கான வால்பேப்பர்களின் தொகுப்புகள் அடங்கும்.
மேலும், ஃபார் க்ரை, வாட்ச் டாக்ஸ், கோஸ்ட் ரீகான், அசாசின்ஸ் க்ரீட் ஆகிய சாகசங்கள் நிறைந்த யுபிசாஃப்டின் புதிய விளையாட்டுகளை ஸ்டேடியாவில் சேர்ப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. யுபிசாஃப்ட் ஒரு பிரெஞ்சு வீடியோ கேம் நிறுவனமாகும். இது மாண்ட்ரூயிலை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது உலகம் முழுவதும் பல விளையாட்டு மேம்பாட்டு ஸ்டேடியோக்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.