சர்வதேச அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் விடியோ ஸ்டிரீமிங் தளம் யூ-ட்யூப். இத்தளத்தில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 24 மணி நேரம் ஓடக்கூடிய புதிய காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் யூ-ட்யூப் தனது வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திவருகிறது. அதில் யூ-ட்யூப் பிரீமியம் (YouTube Premium), யூ-ட்யூப் மியூசிக் பிரீமியம் (YouTube Music Premium) உள்ளிட்டவை முக்கியமானவை.
இந்த வசதிகளைப் பெறச் சந்தாதாரர்கள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இதுவரை கடன் அட்டை, பற்றுஅட்டைகளைப் (கிரெடிட், டெபிட் கார்டு) பயன்படுத்தி மட்டுமே வாடிக்கையாளர்களால் பணம் செலுத்த முடிந்தது.
இருப்பினும் இந்தியாவில் யுபிஐ (UPI) என்ற முறையே பிரபலமானது. எனவே, கடன் அட்டை, பற்று அட்டைகளுடன் யுபிஐ (UPI) முறையையும் பணம் செலுத்தச் சேர்க்க வேண்டும் என்று யூ-ட்யூப் பயனாளர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில், பயனாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கூகுள் நிறுவனம், இந்தியாவில் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாக்களை யுபிஐ (UPI) முறையில் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் இணையப் பயன்பாடுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், யூ-ட்யூப் தளமும் பணம் செலுத்த புதிய முறையைச் சேர்த்துள்ளதால், யூ-ட்யூப்பிற்கு இது பெரும் லாபத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெளியான ஒன்பிளஸ் மொபைல்! எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா?