தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், சமூக வலைதள ஜாம்பவானான பேஸ்புக்கிடம் கைமாறியதை அடுத்து, பல அம்சங்களை வாட்ஸ் செயலியில் பேஸ்புக் நிறுவனம் புகுத்தியது. எனினும், வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் தகவல்கள், செய்யப்படும் அழைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொடர்ந்து, தாய் நிறுவனமான பேஸ்புக்கின் கீழ் இயங்கும் செயலிகள் அனைத்தும், பயனர்களின் தகவல்களை விளம்பர நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் என்று புதிய தனியுரிமைக் கொள்கையை வகுத்தது வாட்ஸ்அப்.
பேஸ்புக்கின் குறுக்கீடு
இந்நிலையில், முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்யப்போவதாக அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் அறிவித்தது. அதன்படி, புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்யும் பயனர்களிடம் தங்களின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தியது.
தொடர்ந்து, இது குறித்து சர்ச்சைகள் வெடித்தபோதும், தங்கள் தரப்பு வாதமாக, பயனர்களின் தகவல்கள் அனைத்து பாதுகாப்பானதாகவே இருக்கும் என்றும், பயனர்களின் தகவல்களை நாங்கள் கூட அணுகமுடியாது எனவும் வாட்ஸ் அப் தொடர்ந்து தெரிவித்து வந்தது.
தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து வழக்கு
இந்நிலையில், முன்னதாக இந்த தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.என்.படேல், ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில், தனியுரிமைக் கொள்கையை ஏற்காத பயனர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வசதிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை.09) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேஸ்புக் நிறுவனம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வ், தாங்கள் இந்த புதிய தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைப்பதாகவும், இனி தாங்கள் எந்த பயனரையும் தங்கள் கொள்கையை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தகவல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படும் வரை தங்களது புதிய கொள்கைகளை ஏற்கும்படி பயனாளர்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும், இந்தக் கொள்கை குறித்த செய்தி மட்டும் தொடர்ந்து பயனாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாட்ஸ்-ஆப் குழுக்களில் குறைகளைப் பதிவேற்றினால் சைபர் கிரைம் நடவடிக்கை பாயும்!