இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. டிக்டாக் தடையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப மித்ரான், சிங்காரி போன்ற இந்தியச் செயலிகளுடன் ஃபேஸ்புக்கின் ரீல், யூடியூப்பின் சார்ட்ஸ் செயலிகளும் களத்தில் இறங்கின.
இந்நிலையில், தனது சார்ட்ஸ் செயலியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் டிக்டாக் போன்ற மற்ற செயலிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கூகுள் கண்காணிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி இன்ஃபர்மேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற கூகுள் அல்லாத ஆண்ட்ராய்டு செயலிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அந்தச் செயலிகளின் தரவுகளைக் கூகுள் ஊழியர்கள் ஆராய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் இதுகுறித்த தரவுகளைக் கூகுள் ஊழியர்கள் ஆராய்ந்துள்ளனர்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுள் மொபைல் சேவைகள் (GMS) வழியாகச் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று கூகுள் நம்புவதாகவும் தி இன்ஃபர்மேஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூகுள், பேஸ்புக் போன்ற ஒரு சில நிறுவனங்கள் டெக் துறையில் மற்ற நிறுவனங்கள் வளரவிடாமல் ஆதிக்கம் செய்வதாக நீண்ட காலமாகவே புகார் உள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு தற்போது விசாரணை செய்துவருகிறது.
முன்னதாக, தனது போட்டியாளர்களைக் கண்காணிக்கும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒனாவோ (Onavo) என்ற விபிஎன் சேவையைப் பயன்படுத்தியதாக 2017ஆம் ஆண்டில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றஞ்சாட்டியது. சர்ச்சைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒனவோ விபிஎன் சேவையை ஃபேஸ்புக் நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எச்சரிக்கை: வங்கி கணக்குகளை பின்தொடரும் ‘ஜோக்கர்’ மால்வேர்!