ட்ரூ காலர்
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளைக் கண்டறிய உதவுவதால் சீன செயலியான 'ட்ரூ காலருக்கு' பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் பயனாளர்களின் தகவல்களை 'ட்ரூ காலர்' திருடிவருவதாக நீண்ட காலமாகப் புகார்களும் உள்ளன.
புதிய சிக்கல்
இந்நிலையில் நேற்று 'ட்ரூ காலர்' பயனாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில், உங்களுடைய கைப்பேசி எண் ஐசிஐசிஐ யுபிஐ வங்கி பணப்பரிமாற்றச் சேவையில் இணைக்கும் பணி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயனாளர்கள் யுபிஐ சேவையை ப்ளாக் செய்தும் 'ட்ரூ காலரை' கைப்பேசியிலிருந்து நீக்கியும் வருகின்றனர்.
நடந்தது என்ன?
'ட்ரூ காலரின்' 10.41.6 வெர்சனில்தான் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 'ட்ரூ காலரின்' இந்தப் புதிய வெர்சன் உள்ளவர்களின் கைப்பேசி எண்களிலிருந்து ஐசிஐசிஐ யுபிஐ சேவையில் இணையத் தானாகக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. யுபிஐ வங்கிப் பரிமாற்றத்தில் சேவையை வழங்க 'ட்ரூ காலர்' நிறுவனம் 2017ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரூ காலர் விளக்கம்
'ட்ரூ காலரின்' 10.41.6 வெர்சனில் உள்ள குறைபாடு காரணமாக இதுபோல நிகழ்ந்துள்ளதாகவும் குறை நீக்கப்பட்ட புதிய வெர்சன் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் 'ட்ரூ காலர்' தரப்பு விளக்கமளித்துள்ளது. மேலும் குறைபாடு உள்ள வெர்சன் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது.