இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம், ஊரடங்கு காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து கூகுள், மேப்ஸ் உள்ளிட்டவற்றில் அப்டேட் செய்கிறோம். இதுவரை 33 நகரிலுள்ள 1,500க்கும் மேற்பட்ட இடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளோம்.
இந்தத் தகவல்களைப் பயனாளர்கள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தெரிந்துகொள்ளலாம். வரும் காலங்களில் மற்ற பிராந்திய மொழிகளையும் சேர்க்கவுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்க கூகுள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. கரோனா குறித்து பயனாளர்கள் ஏதேனும் தேடினால், அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பின் தளங்களே பயனாளர்களுக்குக் காட்டும்.
அதேபோல யூடியூபில் கோவிட்-19 வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்திலும் கிடைக்க வழி செய்துள்ளோம். செய்திகளை விரைவில் ஆராய்ந்து தவறானவற்றை நீக்கிவருகிறோம்.
கோவிட்-19 குறித்த தகவல்களைத் தர புதிய இணையதளத்தை கடந்த வாரம் கூகுள் தொடங்கியது. தற்போது இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. வரும் காலங்களில் பிராந்திய மொழிகளையும் சேர்க்கவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெளியான ஒன்பிளஸ் மொபைல்! எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா?