டெல்லி: புதியதாக அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 5, பிக்சல் 4ஏ (5ஜி) கைபேசிகள் நிகழ்வின் முன்னதாக, கூகுள் உதவியாளர் தளத்தில் ஹோல்ட் ஃபார் மீ எனும் புதிய அம்சத்தினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், ஹோல்ட் செய்யப்பட்ட அழைப்புகளுக்காக வேலையை விட்டு காத்திருக்கத் தேவையில்லை. ஆம், சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகும்போது, நாம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச, சில நிமிடங்கள் காத்திருக்க நேரிடும். இதையும் விட்டுவைக்காமல் கணக்கில் எடுத்துள்ளது கூகுள் உலாவிகள்.
கூகுள் உதவியாளரின் புதிய ‘ஹோல்ட் ஃபார் மீ’ அம்சத்தின்படி, நமக்காக கூகுளின் இந்த சேவை காத்திருக்கும். எதிர்தரப்பில் இருந்து பதில் வரும் வரை, நம்மை அன்றாட வேலைகளை செய்ய அனுமதிக்கும்.
எதிர்தரப்பில் இருந்து பதில் கிடைக்கும் தருவாயில், நம்மை சமிக்ஞை மூலம் விளிப்பூட்டும். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ள அம்சமாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.