கரோனா கிருமித் தொற்று காரணமாக ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் அனைவரும் காணொலி கலந்தாய்வு (வீடியோ கான்ஃபெரன்சிங்) செயலியை நம்பி தங்கள் வேலையை செய்துவருகின்றனர்.
இதனையடுத்து ஜூம் என்னும் காணொலி கலந்தாய்வு செயலி, பெருமளவு பதிவிறக்கங்களுடன் புதிய உச்சத்தைத் தொட்டது. இச்சமயத்தில் ஜூம் செயலி ஆபத்தானது எனப் பல நாடுகளும், பல நிறுவனங்களும் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்தன. இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், ‘மெசஞ்சர் ரூம்’ என்னும் தளத்தைப் பயனர்களுக்காக உருவாக்கியுள்ளது.
மெசன்ஜர் ரூம்
காணொலி கலந்தாய்வு செயலிகளின் போராட்டத்தில் ஜூம் செயலி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே ஃபேஸ்புக் ‘மெசன்ஜர் ரூம்’ யை அறிமுகம் செய்துள்ளது. இது மெசன்ஜர் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம். ஜூம், பிற செயலிகளைப் போலவே ஒரே நேரத்தில் பலருடன் காணொலி கலந்தாய்வு மூலம் இணைய ‘மெசன்ஜர் ரூம்’ உதவிசெய்யும். ஒரு சமயத்தில் 50 நபர்கள்வரை இதில் பங்கு பெறலாம்.
ஜூம் செயலியில் 100 நபர்கள் வரை காணொலி கலந்தாய்வில் பேசிக்கொள்ளலாம். ஜூம் செயலியைப் பொறுத்தவரை 40 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக அழைப்புகளைச் செய்யலாம். ஆனால் ‘மெசன்ஜர் ரூம்’ இல் இந்தக் கால நேரம் எல்லாம் கிடையாது. முழுவதுமாக இலவச அழைப்புகளை வழங்குகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்களும் இந்தக் காணொலி கூட்டத்தை ஏற்பாடு செய்து அவர்களது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். குறிப்பாக இந்த அம்சம்தான் ஜூம் செயலியை உலகமெங்கும் பிரபலமாக்கிவிட்டது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போர்டல், ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகியவற்றிலும் ரூம் அம்சம் கூடிய விரைவில் இடம்பெறும் என ஃபேஸ்புக் கூறியுள்ளது.
எப்படி பயன்படுத்துவது
- ஃபேஸ்புக் மெசன்ஜரில் உள்ள காணொலி சின்னத்தை சொடுக்கவும்
- இந்தக் காணொலி அழைப்பை செல்போன் அல்லது கணினி மூலமாகவும் செய்யலாம்
‘மெசன்ஜர் ரூம்’ பாதுகாப்பானதா
ரூம் யை பாதுகாப்பாக வைக்க பல பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியுள்ளதாக ஃபேஸ்புக் கூறியிருக்கிறது. ரூமை ஏற்பாடு செய்பவரே யார் அதில் பங்கு பெறலாம் என்ற முடிவு எடுக்கும் உரிமை உண்டு. மேலும் அந்த அழைப்பில் அவர் கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு நபர் வேண்டாம் என்று நினைக்கும்போது ரூமை ஏற்பாடு செய்தவர், அவரை நீக்கி லாக் செய்துகொள்ளலாம். எந்த ஒரு காணொலி அழைப்பையும் ஃபேஸ்புக் ஒட்டுகேட்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
எப்போது ‘மெசன்ஜர் ரூம்’ யை பயன்படுத்தலாம்
இந்த வாரத்தில் அமெரிக்கா, லண்டன், கனடா ஆகிய சில நாடுகளில் மட்டும் இந்த அம்சத்தை வெளியிடுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிற நாடுகள் அடுத்தடுத்த வாரங்களில் இந்த அம்சத்தை பெறுவார்கள் என்று கூறியுள்ளது ஃபேஸ்புக்.