தற்போதைய காலகட்டத்தில் பல க்ரிப்டோகரன்சிகள் வேகமாக வளர்ந்துவருகின்றன. பல முன்னணி நிறுவனங்களும் பல க்ரிப்டோகரன்சி திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன. பல மாத யூகங்களுக்குப் பிறகு இறுதியாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது சொந்த க்ரிப்டோகரன்சியை நேற்று அறிவித்துள்ளது.
லிப்ராவும் கலிப்ராவும்!
'லிப்ரா' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த க்ரிப்டோகரன்சிகளை நிர்வகிக்க 'கலிப்ரா' என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது ஃபேஸ்புக். இதன்மூலம் 'லிப்ரா' பரிவர்த்தனை தகவல்களை ஃபேஸ்புக் தனது விளம்பரங்களுக்குப் பயன்படுத்தாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த க்ரிப்டோகரன்சியின் வாலட் (சேமிப்பிடம்) வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர்களில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பைப் போல ஃபேஸ்புக் நிறுவனம் கலிப்ரா நிறுவனத்தை முழுமையாக நிர்வகிக்கவோ, முடிவுகளைக் கட்டுப்படுத்தவோ முடியாது. மாறாக வோடோபோன், விசா, பேபால் போன்ற 27 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள இந்தத் திட்டத்தில் முடிவு எடுக்கும் தருணங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஒரு ஓட்டை மட்டுமே பதிவு செய்யமுடியும்.
உலகில் வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் 170 கோடி மக்களுக்கு நிதி சேவைகளை அளிக்க உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள இந்த க்ரிப்டோகரன்சி 2020இன் முதல் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.