கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இணையப் பயன்பாடு என்பது 30 முதல் 60 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. இணையப் பயன்பாடு ஒருபுறம் அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் ஹேக்கிங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்தியப் பயனாளர்களைக் கவரும் வகையில், அந்நியர்கள் யாரும் தங்கள் ஃபேஸ்புக் கணக்கைப் பார்க்க முடியாத வகையில் கணக்கை முடக்கும் புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் குறிப்பாகப் பெண்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.
இந்த வசதியைத் தேர்ந்தெடுக்கும் பயனாளர்களின் கணக்குகள் குறித்த தகவல்களையும் அவர்கள் பதிவிடும் புகைப்படம், போஸ்ட் குறித்த தகவல்களையும் அந்நியர்கள் பார்க்க முடியாது.
இந்த வசதியைப் பயன்படுத்தும் கணக்குகளில் அந்நியர்கள் வரும்போது, கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பாப்அப் நோட்டிபிகேஷன் அவர்களுக்குச் செல்லும். தற்போது இந்தியாவில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டும் இந்த வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் ஃபேஸ்புக் செயலிகளிலும் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்து வேலை - சைபர் தாக்குதல் அபாயம்