அகமதாபாத்: பைதான் புரோகிராமிங் மொழித் தேர்வில் (Python programming language) தேர்ச்சி பெற்று உலகின் இளவயது கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற சாதனையை தனதாக்கியுள்ளார் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த அர்ஹாம் ஓம் தால்சானியா (Arham Om Talsania) என்ற சிறுவன்.
ஆறு வயதான இவர் இரண்டாம் வகுப்புதான் படித்து வருகிறார். இந்தச் சாதனை குறித்து சிறுவன் கூறுகையில், “என் தந்தை எனக்கு புரோகிராமிங் கோடிங் தொழிற்நுட்பத்தை கற்றுக் கொடுத்தார். நான் இரண்டு வயதில் இருந்தே, மடிக்கணிணி பயன்படுத்தி வருகிறேன். மூன்று வயது இருக்கும்போது ஐஒஎஸ் (IOS) மற்றும் விண்டோஸ் (Windows) உடன் கேஜெட்களை வாங்கினேன்.
அப்புறம் எனது தந்தை பைத்தானில் வேலை பார்ப்பதை அறிந்தேன். தற்போது பைதான் தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளேன். சின்ன சின்ன கேம்களை உருவாக்குவேன். அப்பாவும், சின்ன சின்ன வேலைகளை கொடுப்பார். கொஞ்சம் மாதம் கழித்து, உலகின் இளவயது கம்ப்யூட்டர் புரோகிராமர் என்ற சான்றிதழ் கிடைத்தது” என்றார்.
அர்ஹாமின் தந்தை ஓம் தால்சானியா மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்துவருகிறார். சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் புரோகிராமில் மகனுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்து அவருக்கு கோடிங் தொழிற்நுட்பத்தை கற்றுக் கொடுத்துள்ளார். இதுகுறித்து தால்சானியா கூறுகையில், 'சிறுவயதில் இருந்தே ஆர்வத்துடன் இருப்பான். கேம்கள் உருவாக்கும் கோடிங் டெக்னாலஜியை விரைவில் கற்றுக்கொண்டான்.
கடின புதினங்களையும் கண்டறிந்துவிடுவான். அதனால், அவனுக்கு நான் மேற்கொண்டு கற்றுக் கொடுத்தேன். தற்போது அவன் கோடிங் டெக்னாலஜியை பயன்படுத்த கைதேர்ந்துவிட்டான். நான் அவனுக்கு கணிணி மென்பொருள் குறித்த சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தேன். தற்போது, மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கூட்டாளராகவும் அங்கீகாரம் பெற்றுள்ளார். கின்னஸ் புத்தக உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்தோம்” என்றார்.
இதையும் படிங்க: கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறேன் - சிறுமியின் தளராத நம்பிக்கை