தமிழ்நாடு பாரம்பரிய பருத்தி வகையான கருங்கனி பருத்தியைக் கொண்டு, கையினால் நெசவு செய்யப்பட்ட ஆடைகளை, புதிய வகையில் வடிவமைத்து அவற்றை உலகெங்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் இந்த ஜப்பானிய பெண்மணி.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பருத்தி சென்றது நீண்ட நெடிய வரலாறு. 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டது. அப்போது நமது நாட்டில் பருத்தி ஆடைகளை நெசவு செய்யும் வடிவமைப்பு முறையும் ஜப்பானுக்குச் சென்றது. காலிக்கட் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால் இவை காலிக்கோ என்று அழைக்கப்பட்டது. அதனையே தனது நிறுவனத்தின் பெயராகவும் வைத்துள்ளார் ஃபூமி கோபயாஷி (Fumie Kobayashi).
பாரம்பரிய பருத்தி வகைகளை பயன்படுத்தி புதிய வகையில் ஆடைகளை வடிவமைப்பதன் மூலம் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதோடு புதிய பாரம்பரியத்தையும் உருவாக்க முடியும் என ஃபூமி கோபயாஷி நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், வங்க தேசத்தில் உள்ள பாரம்பரிய கைத்தறி ஆடைகளை மீட்டு அவற்றை அழகிய வேலைப்பாடுகளுடன் உலகுக்கு அறிமுகப்படுத்திய கோபயாஷி, தற்போது தமிழகத்தைச் சேர்ந்த கருங்கனி பருத்தியைப் பயன்படுத்தி புதிய வடிவமைப்புடன் ஆடைகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதற்காக இங்குள்ள காஷ்கோம் அமைப்புடன் கைகோர்த்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய பருத்தி வகைகளை மீட்கும் வேலையில் காஷ்கோம் அமைப்பைச் சேர்ந்த சுவாமிநாதன் ஈடுபட்டுள்ளார். இவர் ஒரு இயற்கை விவசாய ஆர்வலரும் கூட.
தற்போது கருங்கனி பருத்தி பயிரை உணவுப் பயிர்களுடன் சேர்த்து பயிரிட விவசாயிகளுக்கு உதவி செய்து வருவதாகவும், இவை சந்தைக்கு வருவதில் உள்ள சிக்கல்களை களைந்து வருவதாகவும் கூறும் சுவாமிநாதன், இதன்மூலம் மண் வளம் காக்கப்படுவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் கூறுகிறார். மேலும் இதில் இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் இது சுற்றுச்சூழலுக்கும், ஆடைகளை அணியும் மக்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் என்கிறார்.
ஃபூமி கோபயாஷி (Fumie Kobayashi), சுவாமிநாதனின் தயாரிப்புகள் மார்ச் 4 ஆம் தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள சாரங்கி விற்பனை அங்காடியில் காட்சிப்படுத்தப்படும்.
கருங்கனி பருத்தியால் செய்யப்பட்ட கைத்தறி ஆடைகளை உலக சந்தைக்கு கொண்டு செல்வதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்க்கை வளம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் பணியில் பல மைல் கடந்து வந்து ஜப்பானியப் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி தடை நீக்கம்!