ஒரு புத்தகத்தை தொடும்போது
நீ ஒரு அனுபவத்தை தொடுவாய்
என்ற நா. முத்துகுமாரின் வரிகள் எத்தனை அர்த்தம் பொதிந்தவை என்பதை புத்தக விரும்பிகள் மட்டுமே அறிவர்.
ஒரு புத்தகம் என்பது, ஒரு மனிதன் தனக்கு முன்பின் அறிமுகமில்லாத, முகம் தெரியாத வேறு மனிதனுக்காக எழுதும் கடிதம் போன்றது. அதனுள் மூழ்க நினைப்பவருக்கு அதன் ஆழத்திலிருந்து என்ன வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
அப்படிபட்ட புத்தகங்களைப் போற்றும் 'உலக புத்தக தினம்' இன்று கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே வளர்ப்பதற்காக, 1995ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடத் தொடங்கியது. புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து எழுத்தாளர்களை மறக்கும் இன்றைய சூழலில், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா கார்சிலாசோ டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோரின் நினைவு தினமான இந்த நாளையே புத்தக தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்தனர்.
கண்களைத் திறந்து கொண்டே கற்பனையில் வாழ முடியும் என்றால் அது ஒரு புத்தகத்தை வாசிக்கும் போதுதான் சாத்தியப்படும். எழுத்தாளர்களின் எதார்த்த உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் ஆகாய விமானம் இந்த புத்தகங்கள்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடிய வெவ்வேறு மனிதர்களை - கதாபாத்திரங்களாக ஒரு புத்தகம் அவனுக்கு அறிமுகப்படுத்திவிடும். அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்வோடு நம்மை பயணிக்க வைக்கும் அனுபவத்தை புத்தகங்கள் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஒரு சிறந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தனிச்சுவை பொருந்தியது, அதை அனுபவிக்க நம் நாவில் அமைந்திருக்கும் சுவை சுரப்பிகள்போல புத்தியிலும் சில சுரப்பிகள் இருகின்றன என்பதற்கு - அதை உணர்ந்தவர்கள் மட்டுமே சாட்சி.
புத்தகம் ஒரு சிறந்த நண்பன்; நல்ல காதலன், அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வகைக்கும் வாழ்க்கையின் பொருள் வடிவம்...!
தாக்குதல் எதன் மீது நடத்தப்பட்டாலும் அது வன்முறைதான். எண்ணற்ற வாழ்க்கைப் பாடங்களை தன்னுள்ளே சுமந்திருக்கும் உயிரற்ற புத்தகங்களுக்கும் அது பொருந்தும். அப்படிப்பட்ட புத்தகங்களை மடக்குவதும், அதில் கிறுக்குவதும், வாங்கிய புத்தகத்தை வாசிக்காமல் வைத்திருப்பதும்கூட வன்முறை என்று கருதுவர் புத்தகக் காதலர்கள். அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இனியேனும் எல்லோரும் புத்தக வாசிப்பை நேசிப்போம்!