கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு 150ஆவது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜனவரி 28ஆம் தேதி காலை 6.00 மணி, 10.00 மணி, மதியம் 1.00 மணி, இரவு 7.00 மணி, 10.00 மணி, ஜனவரி 29, காலை 5:30 மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
இந்த ஜோதி தரிசனம், ‘ஏழு திரைகளை’ நீக்கிய பிறகுதான் தீபஜோதி ஒளியைக் காண இயலும். கறுப்புத் திரை, நீலத் திரை, பச்சை திரை, செந்திரை, பொன்மைத் திரை, வெண்திரை, கலப்பு திரை ஆகிய ஏழு திரைகளை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிப்பார்கள்.
அப்போது ஜோதியைக் காண வரும் பக்தர்கள், “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே ஜோதி தரிசனம் கண்டு மகிழ்வர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டம், மாநிலத்திலிருந்து கலந்துகொள்வது வழக்கம்.
பசியோடு வருபவர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கி பசியைப் போக்கியவர் வள்ளலார். அவர் நிறுவிய அன்னதான கூடத்திலுள்ள, “அணையா அடுப்பு” மூலம் இன்றுவரை பசியோடு வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.