மயிலாடுதுறை : வைத்தீஸ்வரன் கோயில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு திருவிழாவிற்கான யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
செவ்வாய் தலமாக விளங்குவதாலும், இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபாடு செய்து வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பது ஐதீகம். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இத்தகைய பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின்னர் ஆகமவிதிகளின் படி 12 ஆண்டுகளை கடந்தும் குடமுழுக்கு செய்யாமல் இருந்துவந்தது.
இச்சூழலில், மறைந்த தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் திருப்பணிகளை தொடங்க தீர்மானித்தனர். அதன்படி, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி திருப்பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தம் நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திருப்பணி பணிகள் நிறைவுற்று, ஏப்ரல் 29ஆம் தேதி 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
அதற்கான யாகசாலை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு குடமுழுக்கில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகமும், விழா குழுவினரும் கலந்துகொண்டு குடமுழுக்கை நடத்தவுள்ளனர்.