காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்துள்ளதை 45 நாள்கள் சனி பரிகாரத்திற்கு உகந்த காலம் என்பதால் தொடர்ந்து நாடு முழுவதுமிருந்தும் திருநள்ளாறு நோக்கி பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறையும் சேர்ந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் திருநள்ளாறில் குவியத் தொடங்கினர். சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து 3ஆவது சனிக்கிழமை ஆன நேற்று ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களும் இலவச தரிசனத்திலும் பக்தர்கள் குவிந்தனர்.
ஆன்லைன் பதிவு எடுத்து வரும் பக்தர்களின் ஆன்லைன் பதிவை சோதித்து, வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பொங்கல் விடுமுறையுடன் சனிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
ஏற்கனவே அறிவித்த படி நளன்குளத்தில் குளிக்க அனுமதியில்லாததால் பக்தர்கள் மனவருத்தத்துடன் சனி பகவானை தரிசித்து சென்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட காவல்துறை 200 க்கும் மேற்பட்ட காவலர்களை ஈடுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தரங்கம்பாடி அருகே சனி பகவான் கற்சிலை கண்டெடுப்பு!