ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் கவுந்தபாடி குருச்சான் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் வீட்டின் அருகே மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி சுப்பிரமணியம் கடைக்கு ரெய்டுக்கு வந்த போலி அலுவலர்கள், குட்கா, ஹான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளதா என, சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வீட்டிலும் ரெய்டு செய்வதாகக்கூறி, சுப்பிரமணியத்தை திசைத் திருப்பி விட்டு வீட்டிலிருந்த ஒன்பது சவரன் தங்க நகைகளை திருடு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அரசு அலுவலர்கள் வேடத்தில் வந்த இளைஞர்களை கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என மாவட்ட காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.