கடலூர் மாவட்டம் சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன் (21). இவர் அப்பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் அரங்கநாதன் நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை ஓர் ஆண்டாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அன்பழகனின் நடவடிக்கை பிடிக்காத அச்சிறுமி அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அரங்கநாதர் தெருவில் உள்ள சிறுமியின் வீடு நேற்றிரவு நீண்ட நேரமாகியும் பூட்டாமல் திறந்து கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீட்டில் யாரும் இல்லை.
அப்போது ஒரு அறையில் கைகள் கயிறால் கட்டப்பட்ட நிலையில், தலையில் பின்புறம் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞரின் உடல் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் சிதம்பரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் அன்பழகன் உடலை மீட்டு உதற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் பிரச்னையால் சிறுமியின் குடும்பத்தினர் அன்பழகனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே உடலைப் போட்டுவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிப்பதற்கு காவல் துணை ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்தச் சிறுமியின் தந்தை பாபு, தாய் சத்யா, 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் 17 வயது சகோதரன் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் சகோதரன், அன்பழகனை வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.