சென்னை ஆவடி அடுத்த மோரை, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனில்லால் (46).
இவர், அதே பகுதி கன்னியம்மன் நகரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி சுனில்லால் கடைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார்.
பின்னர், அவர் கொண்டு வந்த 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்து விட்டு ரூ.12ஆயிரம் வாங்கி சென்றுள்ளார்.
இதையடுத்து சுனில்லால், நகையை சோதனை செய்துள்ளார். அப்போது, அந்த நகை தங்க முலாம் பூசிய போலியானது என தெரியவந்தது.
இது குறித்து சுனில்லால் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அடகு கடையில் மோசடி செய்த இளைஞர் கிழக்கு தாம்பரம், காந்தி நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் மீது கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, காவல் துறையினர் கண்ணனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.