கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்ல சுவாமி. இவரது மகன் நவீன் (32), படித்துவிட்டு வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தனக்கு வேலை கிடைத்தால் நேர்த்திக்கடனாக தன் உயிரை தருவதாக கடவுளிடம் இவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பையிலுள்ள பேங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக பணி கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு வேலை கிடைத்ததால் வேண்டியபடி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார். பின்னர், நாகர்கோவில் வந்த அவர், சாமிக்கு வேண்டியபடி தனது உடலை தருவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு வடசேரி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரின் இந்த முடிவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தனக்கு வேலை கொடுத்த கடவுளுக்கு இதை தருகிறேன், அதை தருகிறேன் என வேண்டுதலை நிறைவேற்றினால் பரவாயில்லை. வேண்டுதலுக்காக, தன் இன்னுயிரை விடுவது எல்லாம் மிகப்பெரிய முட்டாள் தனமான முடிவு, படித்த இளைஞர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
இதையும் படிங்க...ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை? - தாய், சேய் உயிரிழப்பு!