சென்னை: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக நண்பர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை, செம்பாக்கத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, முகநூல் வாயிலாக, எருக்கஞ்சேரி, எஸ்.எம். நகர், ஓ.எஸ்.சி., தெருவைச் சேர்ந்த, சுபீன் பாபு(25) என்பவர், 2016ஆம் ஆண்டில் அறிமுகமானார். முதலில் நண்பர்களாக பழகிய இருவரும், நாளடைவில் காதலித்தனர். தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலமுறை அவருடன், சுபீன்பாபு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அதை, தனது கைபேசியில் பதிவுசெய்து, வீட்டின் அருகில் வசிக்கும், தன் நண்பரான சுஜின் வர்கீஸ்(27) என்பவருக்கும் காட்டியுள்ளார். இச்சூழலில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, சில தினங்களாக சுபீன்பாபுவை அந்த பெண் வற்புறுத்தினார். இதனால், தனிமையில் இருந்த காணொலியை இளம் பெண்ணிடம் காட்டி, நண்பரான சுஜின் வர்கீஸூடன் சேர்ந்து, சுபீன்பாபு மிரட்டினார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்ததில் 16 வயதிலிருந்தே அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதனால் சுபின்பாபு, அவர்து நண்பர் இருவரையும் ‛போக்சோ’ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.