தேனி: இமை தொண்டு நிறுவனம் முறைகேடாக இரண்டு கோடிக்கும் மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ‘இமை’ என்கிற தொண்டு நிறுவனம் ராஜ்குமார் என்பவரால் நடத்தப்படுகின்றன. வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மகளிர்களுக்கு சுய உதவிக்குழு ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்றுத் தரும் பணிகளில் இந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளன.
இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் இமை தொண்டு நிறுவனம் முறைகேடாக வங்கியில் கடன் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் இன்று(டிச.19) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து மேல்மங்கலம் வந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உங்களது புகார்களை மனுக்களாக அளித்தால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்ததையடுத்து மறியலை கைவிட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு இமை தொண்டு நிறுவனத்தினர் வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி எங்கள் பகுதியைச் சேர்ந்த சுமார் 70 குழுவினரிடம் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுச் சென்றனர். ஆனால் தற்போது வரை எங்களுக்கு கடன் தொகை ஏதும் வழங்கப்படவில்லை.
ஆனால் வாங்காத கடனுக்கு வட்டியும், அசலும் கட்ட சொல்லி தற்போது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மகளிர் சுய உதவிக்குழு பெயரில் முறைகேடாக சுமார் இரண்டு கோடிக்கும் மேல் கடன் பெற்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.