திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் மலைப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. அந்த கல்குவாரி வழியாக செல்பவர்களுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, அரை நிர்வாணத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு, ஆம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சடலத்திற்கு அருகே வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பான் கார்டு, அழகு சாதனப் பொருட்கள் ஆங்காங்கே சிதறி காணப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண் கொலை செய்யப்பட்டு 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் சின்னகொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுமதி என்பதும், அவர் அங்குள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதன்பின் சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் தொழிலாளி மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மூன்று குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை!