நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில், சட்டத்தின் சில நுணுக்கங்களை அனைவரும் தெரிந்து கொள்வது கட்டாயமாகிறது. குற்றம் நடந்த பிறகு காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தால், எங்கள் வரம்புக்குள் உங்கள் பகுதி வரவில்லை என காவல் துறையினர் அலைக்கழித்தால் அவர்களிடம் பூஜ்ய முதல் தகவல் அறிக்கையை (Zero First Information Record) தாக்கல் செய்ய சொல்லுங்கள். அந்த உரிமை உங்களுக்கு உள்ளது. பூஜ்ய முதல் தகவல் அறிக்கை, அதற்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம் ஆகியவற்றைக் காண்போம்.
முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்): குற்றம் நடைபெற்ற பிறகு அதிகார வரம்புக்குள்ளான காவல் நிலையத்தில் நீங்கள் புகாரளித்தால், குற்றம் குறித்த முதல்கட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு குற்றத்தைப் பதிவு செய்வதே முதல் தகவல் அறிக்கையாகும். பதிவு செய்யும்போது, வழக்கிற்குக் குறிப்பிட்ட எண் (serial number) ஒதுக்கப்படும்.
பூஜ்ய முதல் தகவல் அறிக்கை(ஜீரோ எஃப்ஐஆர்): இந்த வகை எஃப்ஐஆரில் அதிகார வரம்புக்குள் வராத காவல் நிலையத்திலும் நீங்கள் குற்றம் குறித்து புகாரளிக்கலாம். ஆனால், இந்த வழக்கிற்கென்று தனியாக எண் ஒதுக்கப்படாது. வழக்குப் பதிவுசெய்த பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கு குறித்து தெரிவிக்கப்படும். வழக்கிற்கானப் பிரத்யேக எண் ஒதுக்கப்பட்ட பிறகு குற்றம் குறித்து விசாரிக்கப்படும். இதுவே, பூஜ்ய முதல் தகவல் அறிக்கை.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நிர்பயா பாலியல் வழக்கிற்குப் பிறகு நீதிபதி வர்மா தலைமையிலான ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. பூஜ்ய முதல் தகவல் அறிக்கைக்கு இந்த ஆணையம்தான் பரிந்துரை செய்தது. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிகார வரம்புக்குள் வராத காவல் நிலையங்களில் குற்றம் குறித்த தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என உள் துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வாய்மொழி உத்தரவாக இது பிறப்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 19ஆம் தேதி 2019ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது. அதிகார வரம்புக்கள் வராத காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய மறுக்கிறார்கள் என உமாபதி என்ற வழக்கறிஞர் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், அதிகார வரம்புக்கள் வராத காவல் நிலையங்களில் குற்றம் குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என்றும், பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கினை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய காவல் துறையினர் மறுத்தால், சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது.
எழுத்துப்பூர்வமாக வழக்கைப் பதிவு செய்வதை தவிர்த்து ஆன்லைன் மூலமாகவும் புகாரளிக்கலாம். தானியங்கி எண் ஒதுக்கப்பட்ட பிறகு புகார் அளித்தவர் விசாணையின் நிலை குறித்து அறியலாம். ஆன்லைனில் புகாரளித்த பிறகு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தவர் தங்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தடம் புரளும் இந்திய ரயில்வே!