அம்பத்தூர் பிருதிவாக்கம் இரண்டாவது அவென்யூவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (38). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டிவருகிறார். சொந்தமாக டிராவல்ஸ் ஆரம்பிக்க முடிவுசெய்த பன்னீர்செல்வம், தனது நண்பர் விஷ்ணு மூலம் அறிமுகமான செங்குன்றம் எடப்பாளையத்தைச் சேர்ந்த பவானி என்பவரிடம், கடனாக 17 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.
அதற்கு, பணத்தை பெற்றுத்தர கமிஷனாக தனக்கு 75 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று பவானிக் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட பன்னீர்செல்வம், கடந்த 17 ஆம் தேதி 75 ஆயிரம் ரூபாயை பவானியிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பவானி, 2 மணி நேரத்தில் பணத்துடன் வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் அங்கு வராததால் அவருக்கு போன் செய்துள்ளார் பன்னீர்செல்வம். அப்போது, பவானியின் செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்று பன்னீர்செல்வம் புகாரளித்தார். ஆனால், காவல் துறையினர் அப்புகாரை வாங்க மறுத்து, பணம் கொடுக்கப்பட்டது பாடி பகுதி என்பதால், கொரட்டூர் காவல் நிலையம் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் கொரட்டூர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினர் அதனை வாங்க மறுத்து, தங்கள் வீடு அம்பத்தூரில் இருப்பதால், அங்கு சென்று புகார் கொடுக்கக்கூறி அனுப்பியுள்ளனர். ஆனால், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரை வாங்க மீண்டும் மறுத்துள்ளனர்.
இதனால், மனமுடைந்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த பன்னீர்செல்வம், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். பின்னர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பன்னீர்செல்வத்தை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: ஆர்பிட் நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை!