வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் நதியா. வெளிநாட்டில் நல்ல ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆம்பூரைச் சேர்ந்த முகவர் ஜெயக்குமாரி கூறியதன்பேரில், மஸ்கட் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற நதியா மூன்று மாதங்கள் வேலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரிடம் தகாத முறையில் நடந்து, தினசரி அடித்துத் துன்புறுத்தி கொத்தடிமையாக மாற்றியிருக்கின்றனர். ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே கொடுக்கப்பட்ட நதியா, உறவினரைத் தொடர்பு கொண்டு நடக்கும் கொடுமைகளைக் கூறி, தன்னை ஊருக்கு எப்படியாவது அழைத்துச் செல்ல கூறியுள்ளார்.
பின்னர், நதியாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள், ’ALL INDIA MOVEMENT FOR SERVICE’ என்ற அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.
அந்த தனியார் அமைப்பினர், நதியாவிவை மஸ்கட் நாட்டிற்கு அனுப்பிவைத்த ஜெயக்குமாரியின் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த முகமது என்பவரிடம் பேசியுள்ளனர். அதற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான் நதியாவை அனுப்புவோம் என முகமது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்ட தனியார் அமைப்பினர், அவர்கள் மூலமாக மஸ்கட் அரசிடம் பேசி நதியாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த நதியா கதறி அழுதார். உடல்முழுவதும் காயத் தழும்புகளுடன் காட்சியளித்த அவரை உறவினர்கள் தேற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நதியா, ” என்னை அடித்து துன்புறுத்தி பல சித்ரவதைகள் செய்தனர். என்னைப்போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். போலி முகவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளுக்கு சூடு வைத்த தாய் கைது!