திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தண்டகுமாரவலசில் கடந்த 10ஆம் தேதியன்று திண்டுக்கல்-ஐ சேர்ந்த செல்வராஜ், வசந்தாமணி ஆகியோர் தங்களது மகனின் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க, உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. ஆனால் அவர்கள் பயணித்த கார் கரூர் அருகே சுக்காலியூர் என்ற இடத்தில் கேட்பாரற்று நின்றுள்ளது.
இதனையடுத்து காவல்துறை விசாரணையில் அவர்கள் இறுதியாக கண்ணம்மா என்பவரது வீட்டுக்கு வந்ததும், பின்னர் காணாமல் போனதும் தெரியவந்தது. இதுகுறித்து கண்ணம்மாவிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர் விசாரணையில் கண்ணம்மா, அவரது மருமகன் நாகேந்திரன், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் சேர்ந்து செல்வராஜ், வசந்தாமணியை கல்லால் அடித்து கொன்று வீட்டின் அருகிலேயே புதைத்தது தெரியவந்தது. பின்னர் கண்ணம்மா, நாகேந்திரன், இளங்கோ ஆகியோர் மீது கொலை செய்தல், உடலை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது!
இதனைத்தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி, செல்வராஜூம் வசந்தாமணியும் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டப்பட்டு இருவரது உடலும் கைப்பற்றப்பட்டது. பின்னர் உடற்கூறாய்வு செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடலில் இருவரும் அணிந்திருந்த நகை காணாமல் போனது குறித்து விசாரித்தபோது, நகைகளை கண்ணம்மாவின் மகள் பூங்கொடி வங்கியில் அடமானம் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூங்கொடியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள நாகேந்திரனின் சகோதரி நாகேஷ்வரி, தனது தாய் ராஜாமணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து பூங்கொடியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த மே மாதம் குழந்தைகளுக்கு மொட்டையடிப்பதாக தனது கூறி ராஜாமணியை உத்தண்டகுமாரவலசுக்கு வரவழைத்துள்ளார். அப்போது, ஈரோட்டில் உள்ள நாகேந்திரனின் வீடு அடமானம் வைக்கப்பட்டது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், ராஜாமணியை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பூங்கொடியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ராஜாமணி உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட கண்ணம்மாவும், அவரது மகள் பூங்கொடியும் அழைத்து வரப்பட்டனர். இருவரும் காவல்துறையினர் முன்னிலையில் நாகேந்திரனின் தாயார் ராஜாமணி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் காங்கேயம் தாசில்தார் முன்னிலையில் ராஜாமணியின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இதனையடுத்து கோவையில் இருந்து வந்துள்ள மருத்துவர் குழுவினர் உடற்கூறாய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து நாகேந்திரனின் தாயாரின் உடல் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொலை செய்யப்பட்ட ரவுடி சுரேஷின் தலை கண்டெடுப்பு