கள்ளக்குறிச்சி மோரை பாதை தெருவில், திருநாவுக்கரசு என்பவரும் அவரது தங்கை சுசீலா என்பவரும் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சுசீலா குடும்பத்தாருக்கு சொந்தமாக செயல்படாத அரிசி ஆலை ஒன்று இருக்கிறது. சுசீலாவின் கணவர் இறந்து விட்ட நிலையில், அந்த அரிசி ஆலையை பாதுகாக்க தனது அண்ணன் திருநாவுக்கரசுக்கு அவர் பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுசீலா குடும்பத்திற்கு தெரியாமல் ஆலையை ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த திருநாவுக்கரசு, விற்ற பணத்தில் தங்கை சுசீலாவுக்கு சிறிதளவு கொடுத்துவிட்டு, எஞ்சிய பணத்தை கொஞ்ச நாள் கழித்து தருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொழில் நஷ்டத்தால் பணம் தேவைப்படுவதாகவும், எனவே தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தரும்படியும் சுசீலா மற்றும் அவரது மகன் சர்வேஷ்வரன் ஆகியோர் நேற்றிரவு (அக்டோபர் 22) திருநாவுக்கரசிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது பணம் கொடுக்க மறுத்ததுடன், மறுபடியும் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் திருநாவுக்கரசு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சர்வேஷ்வரன், கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் கொலை செய்வதாக மிரட்டுகிறாயா என்று அருகில் இருந்த சுவற்றின் மீது தாய்மாமன் திருநாவுக்கரசை தள்ளியுள்ளார். இதில் பின் தலையில் பலத்த அடிபட்ட திருநாவுக்கரசு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். இதையடுத்து கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று சர்வேஷ்வரன் சரணடைந்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தங்கை ராணியையும் கைது செய்துள்ளனர்.
மனைவி மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த திருநாவுக்கரசுக்கு ஆதரவாக அவரது தங்கை குடும்பம் மட்டுமே இருந்த நிலையில், பணத்தகராறு காரணமாக தங்கை மகனாலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த 4 வீடுகளின் கதவில் பட்டா கத்தி