கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக இருந்தவர் சஜீஷ். இவர் அரசு ஊழியர்களாக பணியாற்றிய 26 பேருக்கு ராகவ் பாலாஜி, ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் தயாரித்துக் கொடுத்த போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு ரூ.1.23 கோடி வீட்டுக் கடன் வழங்கியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவினர், 2008ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கோவையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி நாகராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஆவணங்களை சரிபார்க்காமல் கடன் வழங்கிய வங்கியின் மேலாளர் சஜீஷூக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் , போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ராகவ் பாலாஜி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மொத்தம் ரூ.8 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.