கள்ளக்குறிச்சி: நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பாலாஜி என்பவரது நகைக்கடைக்கு, நகை வாங்குவது போல வந்த இரண்டு பெண்கள், கடையில் இருந்து 4 சவரன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல்ஹக் உத்தரவின் பேரில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவ்வேளையில் நேற்று (அக். 16) சங்கராபுரம் தாலுக்கா அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததை தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரித்தனர். இதற்கிடையில் நகைக்கடை திருட்டு சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு படக்கருவியின் காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டதில், இருவரும் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாட்டைச் சேர்ந்த கவிதா, மயிலாடுதுறை தாலுக்கா ஸ்ரீகண்டபுரமத்தைச் சேர்ந்த சுதா என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 4 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீது தேனி, மதுரை, சென்னை, கும்பகோணம், சீர்காழி போன்ற பகுதிகளில் இதே போன்று நகை திருட்டில் ஈடுபட்டதற்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.