சென்னை புளியந்தோப்பு கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (32). இவர் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (அக்.5) மாலை சம்பத் தனது நண்பரை சந்தித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் எழும்பூர் பாலம் அருகே வந்துகொண்டிருந்தார்.
அப்போது, எதிர்திசையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சம்பத் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியதில், சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்தை ஏற்படுத்திய அண்ணாநகரைச் சேர்ந்த மெக்கானிக் ராஜாமோண்டல்(20), சங்கர்(20) ஆகியோரைக் கைது செய்து அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதபோல் சென்னை அமைந்தகரை கான்வென்ட் சாலை அருகே 52 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்தக் காயத்துடன் இறந்துகிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் வந்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அமைந்தகரை காவல் துறையினர் மூதாட்டி யார் என்பது குறித்தும், அவரது இறப்பு குறித்தும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கே.வி.என்.புரம் பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி(52) என்பது தெரியவந்தது.
இவர் அமைந்தகரை அருகே கடைக்குச் சென்று விட்டு நடந்து சென்று கான்வென்ட் சாலையை கடக்கும் போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டி மீது மோதிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு காமராஜர் பல்கலை.யில் பணி வழங்குவதா? - துணைவேந்தர் பகீர் பதில்