திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கிராம உதவியாளர்கள் நடுக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருவேதிகுடியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வெங்கடேஷ்(31) என்பவர் குடமுருட்டி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டு ஹத்திஜா நகர் வழியாக வரும்போது தாசில்தார் நெடுஞ்செழியன் மாட்டுவண்டியை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
அதில் அரசு அனுமதியில்லாமல் அள்ளப்பட்ட மணல் இருந்தது தெரிவந்தது. உடனே மாட்டு வண்டியை பிடித்து திருவையாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு உதவி ஆய்வாளர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல், திருவையாறு உதவி ஆய்வாளர் ஞானமுருகன் ராயம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது ராயம்பேட்டையை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மதியழகன்(35) என்பவர் காவேரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணலை ஏற்றிக்கொண்டு ராயம்பேட்டை மெயின்ரோட்டில் வந்துள்ளார்.
பின்னர் மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளியது தெரியவந்தது. உடனே மாட்டுவண்டியை பறிமுதல் செய்து திருவையாறு காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.