தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள திருலபுரத்தின் வனப்பகுதியில் ஆயுதம் ஏந்திய நக்சல்களின் நடமாட்டம் இருப்பதாக எடுல்லா பயரம் காவல் நிலையத்திற்கு நேற்று(அக்-31) தகவல் கிடைத்தது. இதையடுத்து நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாதவி மங்களு என்ற ஜிலாலு (35), மடகம் தேசி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒரு பார்மர் துப்பாக்கி, மூன்று பென் டிரைவ்கள், ஒரு கார்டு ரீடர், 14 ஜெலட்டின் குச்சிகள், 3 டெட்டனேட்டர்கள், 1 டிஃபன் பாக்ஸ், 75 மீட்டர் கம்பி, மூன்று 1.5 வி பேட்டரிகள் மற்றும் ஒரு மொபைல் போன் மற்றும் நக்சல் இலக்கிய புத்தகங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மாதவி மங்களு மீது ஏற்கனவே கடத்தல், வங்கி கொள்ளை, கொலை என 60 குற்ற வழக்குகளும், மடகம் தேசி மீது 17 வழக்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர், சுக்மா மற்றும் பஸ்தார் மாவட்டங்களில் தீவிரவாத குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.